ஓய்வுபெற்ற நரவனே; புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பு வகித்து வந்த மனோஜ் பாண்டே, பொறியாளர்கள் பிரிவிலிருந்து ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் நபர்.
மனோஜ் பாண்டே, முகுந்த் நரவனே
மனோஜ் பாண்டே, முகுந்த் நரவனே

முகுந்த் நரவனே ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய ராணுவத்தின் 29ஆவது தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்று கொண்டார். ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பு வகித்து வந்த மனோஜ் பாண்டே, பொறியாளர்கள் பிரிவிலிருந்து ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் நபர்.

பிப்ரவரி 1ஆம் தேதி, ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பேற்று கொள்வதற்கு முன்பு, சிக்கிமில் இந்திய, சீன ராணுவ எல்லை, அருணாச்சல பிரதேசம் பகுதிகள் அடங்கிய கிழக்கு ராணுவ பிரிவை மனோஜ் பாண்டே தலைமை தாங்கி நடத்திவந்தார். 

இந்திய சீன எல்லை, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவம் பல்வேறு சவால்களை சந்தித்துவரும் நிலையில், ராணுவத்தின் தலைமை பொறுப்பை மனோஜ் பாண்டே ஏற்றுள்ளார். 

புதிய ராணுவ தளபதியான மனோஜ் பாண்டேவுக்கு முப்படைகளுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

முப்படைகளை ஒருங்கிணைக்கும் முப்படைகளின் தளபதியாக பொறுப்பு வகித்த விபின் ராவத், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், முப்படைகளின் தளபதியை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை. 

பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள மனோஜ் பாண்டே, அந்தமான் நிகோபார் பிரிவின் தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான், முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மற்ற இடங்களில் எல்லாம் தனியே தனியே தான் செயல்பட்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com