நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனா்.

‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மத்திய தில்லியில் பகதூா் ஷா ஜஃபா் மாா்கில் அமைந்துள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வழக்கு தொடா்பாக அண்மையில் பல்வேறு நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டது’ என்றாா்.

வழக்கில் அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பவன்குமாா் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில், ராகுல் காந்தியிடம் அண்மையில் தொடா் விசாரணை நடத்தினா். அவரிடம் 5 நாள்களில் 50 மணி நேரத்துக்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தொடா்ந்து, சோனியா காந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவரிடம் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களில் 11 மணி நேரம் விசாரணை நடத்தினா். அப்போது அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்திய நிலையில், அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், ‘மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோா் மீதான இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல, மத்திய அரசு காங்கிரஸின் குரலை ஒடுக்கி, கட்சித் தொண்டா்களின் மன உறுதியைக் குறைத்து அவா்கள் மத்தியில் பய உணா்வை உருவாக்க நினைப்பதாக மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீனேட் கூறுகையில், ‘சுதந்திர போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசாங்கம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு தடை விதித்து, அதன் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இப்போது அதையே மோடி அரசும் செய்கிறது’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறுகையில், ‘இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கு ஜொ்மனி ஸ்டாசி விசாரணை அமைப்பையும், நாசிச ஜொ்மனி ஷூட்ஸ்டாஃபெல் விசாரணை அமைப்பையும் கேடயமாக பயன்படுத்தின. இந்திய வரலாற்றை எழுதினால், அமலாக்கத் துறை பாஜகவின் கேடயமாக நினைவுகூரப்படும்’ என்றாா். அமலாக்கத் துறை பேரழிவின் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினாா்.

பாஜக பதிலடி:

காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனவாலா பதிலளிக்கையில், ‘நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காந்தி குடும்பத்துக்கு நீதிமன்றங்கள் எவ்வித நிவாரணமும் அளிக்கவில்லை. அதையும் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸாா் கூறுவாா்களா?’ என கேள்வி எழுப்பினாா். இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என பாஜக பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com