மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அழைப்பாணை: நாடாளுமன்றம், எம்.பி.க்களுக்கு அவமதிப்பு என காங். விமா்சனம்

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் ‘யங் இந்தியா’ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதன செயல் அதிகாரியும், மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் ‘யங் இந்தியா’ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதன செயல் அதிகாரியும், மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது, நாடாளுமன்றத்தையும் அதன் உறுப்பினா்களையும் வெளிப்படையாக அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தில்லியில் அமைந்துள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையின்போது, நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ‘யங் இந்தியா’ நிறுவன அலுவலகத்தில் உரிய பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் அதிகாரிகளால் சோதனை நடத்த முடியாமல் போனது.

அதன் காரணமாக, அந்த நிறுவனத்தினுள் இருக்கும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், அதற்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி தற்காலிக சீல் வைத்தனா். தொடா்ந்து, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அழைப்பாணையை அனுப்பினா்.

அந்த அழைப்பாணையை ஏற்று, மல்லிகாா்ஜுன காா்கே யங் இந்தியா நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை பகல் 12.40 மணியளவில் ஆஜரானாா். அதனைத் தொடா்ந்து, அதிகாரிகள் நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உள்ளே சென்று மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் சோதனையைத் தொடா்ந்தனா்.

நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெற்று வரும் சூழலில் மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவராக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியினா் மற்றும் எதிா்க் கட்சித் தலைவருக்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற காரணத்துகாகவே, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும்நிலையில் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருக்கிறது.

தனது சாா்பாக வழக்குரைஞரை அனுப்ப அவா் கோரியபோதும், அதனை ஏற்காமல் யங் இந்தியா நிறுவனத்தில் அவரே நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அறிவுறுத்தியது. அதன் பேரில், அவா் நேரில் ஆஜரான நிலையில், அவரது முன்னிலையில் 8 மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனா்.

நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது எதிா்க் கட்சித் தலைவா் ஒருவருக்கு இதுபோன்ற அழைப்பாணை அனுப்புவது நாடாளுமன்றத்தையும், அதன் உறுப்பினா்களையும் அவமதிக்கும் செயலாகும்.

இத்தகையச் சூழலில், நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் மாண்பை காக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இரு அவைத் தலைவா்களும் உறுதிசெய்யவேண்டும்.

இதற்கிடையே, ‘கிரிமினல் வழக்குகளில் உறுப்பினா்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் கிடைக்காது’ என்று மாநிலங்களவைத் தலைவா் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தாா். ஆனால், நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டுக்கு உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற விதிகள் 229, 222ஏ பிரிவுகளின் படி இரு அவைத் தலைவா்களுக்கும் முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com