ஜம்மு-காஷ்மீர் பாஜகவினருடன் அமித் ஷா மிக முக்கிய சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜகவினருடன் மிக முக்கிய கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்த அதே நாளில், அந்த மாநிலத்தின் பாஜகவினருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியிருப்பது குறித்து பல ஊகங்கள் வெளியாகின.
ஆனால், இந்தக் கூட்டம் குறித்து ஒரு வாரத்துக்கு முன்புதான் திட்டமிடப்பட்டது. ஆனால், இது எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகும் நாளில் நடந்துவிட்டது என்கிறார்கள் பாஜகவினர்.
பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள மிக முக்கிய விவகாரங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகவே உள்ளது. தேர்தலுக்கான நடவடிக்கைகள் முடிந்ததும் தேர்தல் நடத்துவதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறினார்.