74 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ள யு.யு. லலித்

74 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவிருக்கும் யு.யு.லலித், 100 நாள்களுக்கும் குறைவாக இப்பதவியை வகிக்கும் நீதிபதிகளில் 6வது நபராக இணைகிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்
Published on
Updated on
2 min read

நீதிபதி உதய் உமேஷ் லலித், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். 74 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவிருக்கும் யு.யு.லலித், 100 நாள்களுக்கும் குறைவாக இப்பதவியை வகிக்கும் நீதிபதிகளில் 6வது நபராக இணைகிறார்.

நவம்பர் 8ஆம் தேதியுடன் ஓய்வுபெறவிருக்கும் யு.யு. லலித், 74 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றவிருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62.

யு.யு. லலித்துக்கு முன்னதாக 100 நாள்களுக்கும் குறைவாக ஐந்து நீதிபதிகள் பதவி வகித்துள்ளனர். அவர்களில், நீதிபதி கமல் நரைன் சிங், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 25, 1991 முதல் டிசம்பர் 12, 1991 வரை 18 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

நீதிபதி எஸ். ராஜேந்திர பாபு, 30 நாள்கள் அதாவது 2004ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

நீதிபதி ஜே.சி. ஷா 1970ஆம் ஆண்டு டிசம்பர் 17 முதல் 1971ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி  வரை 36 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.

நீதிபதி ஜி.பி. பட்நாயக் 2002ஆம் ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 18 வரை 41 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.

நீதிபதி எல்.எம். ஷர்மா 1992 ஆம் ஆண்டு நவம்பர் 18 முதல் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 11 வரை 86 நாள்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு. லலித், வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் ஓய்வுபெறவிருக்கிறார்.

ஆண்டு முழுவதும் அரசியல் சாசன அமா்வு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள யு.யு. லலித் தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ள 74 நாள்களில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு நடைபெற்ற பிரிவுபசார விழாவில் யு.யு. லலித் கூறுகையில், ‘தீா்ப்புகளை தெளிவாக அறிவிக்க கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வுகள் அவசியமாகும். மூன்று நீதிபதிகள் அமா்வு பரிந்துரைக்கும் வழக்குகளை, அரசியல் சாசன அமா்வு விசாரிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் அந்த அமா்வு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முறையிடுவதற்கும், வழக்குகளைப் பட்டியலிடுவதிலும் எளிமையான முறை கடைப்பிடிக்கப்படும்.

என்.வி. ரமணா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த 14 மாதங்களில் 250-க்கும் மேற்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா். இது உயா்நீதிமன்ற நீதிபதிகள் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com