9 வினாடிகளில் தகர்ந்தது இரட்டை கோபுரம்:  ரூ.20 கோடியில் தகர்ப்பதற்காக ரூ.100 கோடி காப்பீடு!

9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் 9 வினாடிகளில் தகர்ப்பதற்காக அதிக அளவு வெடிகள். மனிதவளம் மற்றும் உபகரணங்கள் உள்பட சுமார் ரூ.20 கோடி செலவானதாகவும், இதற்காக ரூ.100 கோடி காப்பீடு செய்யப்பட்டதாக த
9 வினாடிகளில் தகர்ந்தது இரட்டை கோபுரம்:  ரூ.20 கோடியில் தகர்ப்பதற்காக ரூ.100 கோடி காப்பீடு!


நொய்டா: 9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் 9 வினாடிகளில் தகர்ப்பதற்காக அதிக அளவு வெடிப்பொருள்கள். மனிதவளம் மற்றும் உபகரணங்கள் உள்பட சுமார் ரூ.20 கோடி செலவானதாகவும், இதற்காக ரூ.100 கோடி காப்பீடு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தில்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்ட இரட்டை கோபுர கட்டடம் கட்ட 2004 ஆம் ஆண்டு  முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 9 தளங்களுடன் 14 கோபுரங்களுடன் கட்டடம் கட்டுவதற்கு நொய்டா உள்ளாட்சி நிர்வாகம் அனுமதியளித்தது. ஆனால், 2012 ஆம் ஆண்டு இந்த திட்டம் அப்படியே நிறுத்தப்பட்டு 40 தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இதில், அபெக்ஸ் என்ற கட்டடம் 328 அடி உயரத்தில் 32 தளங்களுடனும், மற்றொரு கட்டடமான சியான் 318 அடி உயரத்தில் 29 தளங்களுடன் பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டது.  

இதற்கு எதிராக குடியிருப்போர் சங்கத்தினர் சட்ட விரோதமாக இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு இந்த சட்டவிரோதமான கட்டடத்தை தகர்க்க உத்தரவிட்டது. 

அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டனர்.

மேலும், குடியிருப்புகளை வாங்கியவர்களுக்கு 14 சதவிகித வட்டியுடன் பணத்தை திருப்பி அளிக்குமாறும், நொய்டா அதிகாரசபைக்கும் சூப்பர்டெக் நிறுவனத்துக்கும் இடையே உள்ள மோசமான உடந்தையின் விளைவு என்று கூறிய உச்ச நீதிமன்றம், நொய்டா ஆணையம் மற்றும் மத்திய கட்டடம் போன்ற நிபுணர் குழுவின் மேற்பார்வையின் கீழ் நிறுவனம் தனது சொந்த செலவில் தகர்ப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. 

இதையடுத்து இரட்டை கோபுர கட்டடத்தை வெடிப்பொருள்கள் வைத்து தகர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களானது ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், கட்டடத்தை தகர்ப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு கவுன்டன் தொடங்கியது. கவுன்டவுன் முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் கட்டடம் முழுவதும் தகர்க்கப்பட்டது.

கட்டட தகர்ப்புக்கான பணி மும்பையைச் சேந்த எடிபைஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு கட்டடங்களிலும் ஆங்காங்கே துளையிடப்பட்டு வெடிப்பொருள்கள் நிரப்பும் பணி கடந்த 22 ஆம் தேதி முடிவடைந்தது.   

கட்டடத்தில் மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டது. 

கட்டடத்தின் தூண்களில் 7 ஆயிரம் துளைகள் போடப்பட்டு 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், இரட்டை கோபுரம் "வாட்டர் ஃபால் இம்ளோஷன்" (நீர்வீழ்ச்சி) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. 9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் 9 வினாடிகளில் தகர்க்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும் மாறியதுடன், பெரும் பரபரப்பு நிலவியது. கட்டடத்தில் வெடிப்பொருள்கள் வெடித்ததும், அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, நீர்வீழ்ச்சி போல் வழிந்து கீழே விழுவதுபோல் சில வினாடிகளில் தகர்ந்து தரைமட்டமானது. 

கடந்த சில வாரங்களாக அரசாங்கம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைகள் அருகில் வசிக்கும் மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியது. குதுப் மினாரை விட உயரமான இரட்டை கோபுரம் கட்டடம் இடிந்து விழுந்த காட்சி ஒரு போர் உச்சக்கட்ட காட்சிக்கு குறைவில்லாமல் இருந்தது. 

ரூ. கோடி செலவு: மொத்தம் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட 32 தளங்களைக் கொண்டு இரண்டு கட்டடங்களை, வெடிப்பொருள்கள்களைக் கொண்டு தகர்ப்பற்கான செலவு சுமார் ரூ.20 கோடி. ஒரு சதுர அடிக்கு ரூ.933 ஆக மொத்தம் ரூ.70 கோடி கட்டுமான செலவு. இந்த கட்டடம் தகர்ப்பதற்காக சுமார் 3,700 கிலோ வெடிப்பொருள்கள், ஏராளமான மனிதவளம் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கட்டடத்தை தகர்ப்புப் பணியில் மூன்று வெளிநாட்டு நிபுணர்கள், இந்திய பிளாஸ்டர் சேத்தன் தத்தா, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் எடிஃபைஸ் இன்ஜினியரிங் திட்ட மேலாளர் மயூர் மேத்தா உள்பட ஆறு பேர் மட்டுமே வெடிப்பொருள்கள் வைத்து தகர்ப்பதற்கான பொத்தானை அழுத்துவதற்கான மண்டலத்திற்குள் இருந்தனர்.

இரட்டை கோபுரம் தகர்ப்பதற்கான மொத்த செலவில், சூப்பர்டெக் மொத்தத் தொகையில் சுமார் ரூ.5 கோடி செலுத்துகிறது, மீதமுள்ள ரூ.15 கோடி இரும்பு உள்பட சுமார் 80 ஆயிரம் டன் குப்பைகளை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும்.

ரூ.100 கோடி காப்பீடு: இரட்டை கோபுர கட்டத்தை தகர்க்கும் போது அருகிலுள்ள பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அளிப்பதற்காக ரூ.100 கோடியை காப்பீடு செய்துள்ளது எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனம்.

“சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டடத்தில் ஒரு 3பிஎச்கே அபார்ட்மெண்ட்டின் விலை சுமார் ரூ.1.13 கோடி. இரண்டு கட்டடங்களிலும் சுமார் 915 அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன, இதன் மூலம் நிறுவனத்திற்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் கிடைத்திருக்கும். மொத்தமுள்ள 915 வீடுகளில், சுமார் 633 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு, வீடு வாங்குபவர்களிடமிருந்து நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.180 கோடி வசூலித்துள்ளது. இப்போது, ​​வீடு வாங்குபவர்களின் பணத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், வெளியே இருந்தால் என் -95 முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியது. பொதுமக்கள் வீடுகளிலுள்ள சன்னல், கதவு போன்றவற்றை மூடி வைக்குமாறும், நீர்த் தேக்கத் தொட்டிகளை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தியது.

இரட்டை கோபுரத்தின் அருகே இருந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இரட்டை கோபுரம் தகர்ப்பையொட்டி குறிப்பிட்ட பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தகர்ப்பின்போது 1 நாட்டிகல் மைல் தூரத்திற்கு வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

கட்டடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் 50 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், 560 காவல் துறையினருடன், 100 மத்திய பாதுகாப்புப் படையினரும், 4 என்டிஆர்எஃப் குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. தகர்ந்த இரட்டை கோபுரத்தின் கழிவுகளை எடுத்துச் செல்வதற்காக 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

கொச்சியில் 2020 ஆம் ஆண்டு இதேபோல பிரம்மாண்டமான குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டது. கட்டட தகர்ப்புப் பணியை தமிழ்நாட்டின் விஜய் ஸ்டீல்ஸ் அண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com