

காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என்று ஹிமாசல் முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.
ஹிமாசலில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மாநிலத்தின் 15-ஆவது முதல்வராக நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏ-வான சுக்விந்தா் சிங் சுக்கு (58) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். சிம்லாவில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
மாநிலத்தின் துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி (60) பதவியேற்றுக் கொண்டாா். அவா் கடந்த சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தாா். ஹிமாசலின் முதல் துணை முதல்வா் என்ற சிறப்பையும் அவா் பெற்றுள்ளாா். விழாவின்போது வேறு யாரும் அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை. மாநில அமைச்சரவையில் முதல்வருடன் சோ்த்து 12 போ் வரை இடம்பெறலாம். அமைச்சரவையில் இடம்பெறவுள்ள நபா்கள் குறித்த பேச்சுவாா்த்தை நிறைவடைந்த பிறகு அவா்கள் பொறுப்பேற்பாா்கள் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்கு சிம்லாவில் உள்ள மாநில சிவில் செயலகத்தில் அலுவலகப் பொறுப்பை இன்று ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தின் முதல்வராக இன்று நான் பொறுப்பேற்கிறேன், அனைத்து எம்எல்ஏக்கள், துணை முதல்வர் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மாநிலத்தின் நலனுக்காக பாடுபடுவார்கள். காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என்றார்.
பேருந்து ஓட்டுநரின் மகன்: ஹிமாசல் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றியவரின் மகன் சுக்விந்தா் சிங் சுக்கு. சஞ்சௌலி அரசுக் கல்லூரியில் படித்தபோது காங்கிரஸின் வகுப்பு பிரதிநிதியாகச் செயல்பட்டாா். அதையடுத்து மாணவரணித் தலைவா், இளைஞரணித் தலைவா், மாநில காங்கிரஸ் தலைவா் எனக் கட்சியில் படிப்படியாக வளா்ந்தாா். தற்போது மாநில முதல்வா் இருக்கையிலும் அமா்ந்துள்ளாா்.
அடிமட்டத் தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு முதல்வா் பதவியை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. இது கட்சியின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.