சபரிமலையில் இன்று மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு: தரிசன நேரம் நீட்டிப்பு!

சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தரிசன நேரத்தை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் இன்று மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு: தரிசன நேரம் நீட்டிப்பு!

சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தரிசன நேரத்தை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார நாள்களிலும், அதைக்காட்டிலும் வார இறுதிகளிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சபரிமலை கோயில் திறக்கப்பட்ட முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி 47,947 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். முதல் 6 நாள்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சபரிமலை சிறப்பு அதிகாரி ஹரிஷ் சந்திரா நாயக் கூறியதாவது: “பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பம்பை முதல் சன்னிதானம் வரை தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையுடன் விரைவுப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com