மத்தியப் பிரதேச ராகிங் விவகாரம்: கொலை வழக்குப் போல கையாண்ட காவல்துறை

மர்ம நாவல்களில் வரும் திருப்பங்களைப் போலேவே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ராகிங் வழக்கு விசாரணையிலும் காவல்துறையினர் பல திடுக்கிடும் திருப்பங்களை வைத்திருந்தனர்.
மத்தியப் பிரதேச ராகிங் விவகாரம்: கொலை வழக்குப் போல கையாண்ட காவல்துறை
மத்தியப் பிரதேச ராகிங் விவகாரம்: கொலை வழக்குப் போல கையாண்ட காவல்துறை

போபால்: மர்ம நாவல்களில் வரும் திருப்பங்களைப் போலேவே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ராகிங் வழக்கு விசாரணையிலும் காவல்துறையினர் பல திடுக்கிடும் திருப்பங்களை வைத்திருந்தனர்.

ஒரு வழக்கை விசாரிக்க, கெட்-அப்பை மாற்றி, புதிய அடையாளங்களை ஏற்று, சந்தேக நபர்களுடன் நண்பர்களாகி என மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் நடந்த ‘குருட்டு’ ராகிங் வழக்கை முறியடிக்க நான்கு போலீஸார் மருத்துவ மாணவர்களாகவும் துணை மருத்துவர்களாகவும் மாறினர். இதன் மூலம், ஒரு தகவலும் தெரியாத ஒரு வழக்கில் அனைத்து விவரங்களையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ராகிங் கொடுமை விவகாரத்தில், 24 வயது பெண் போலீஸ் ஒருவர் மருத்துவக் கல்லூரி மாணவி போல உள்ளேச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார். இந்த பெண் போலீஸ் மற்றும் மூன்று காவலர்களின் உதவியோடு, ராகிங் கொடுமையில் ஈடுபட்ட 11 எம்பிபிஎஸ் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் மிக மோசமாக ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், கடந்த ஜூலை 24ஆம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

ராகிங் நடந்தது பற்றி விரிவாகப் புகாரில் இருந்ததே தவிர, செய்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. எத்தனை பேர் இதில் ஈடுபட்டார்கள் என்றும் தெரியவரவில்லை.

இது குறித்து காவல்துறை ஆய்வாளர் சத்யஜித் சௌஹான் கூறுகையில், வழக்கமாக ஒரு கொலை நடக்கும், அதில் குற்றவாளி யார் என்று தெரியாது. அவரை காவல்துறையினர் தேடுவார்கள். இங்கே ஜூலை மாதம் அளித்த ராகிங் புகாரும் அப்படித்தான். இளநிலை எம்பிபிஎஸ் மாணவர் அளித்த புகாரில், குற்றவாளிகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்கிறார். பாதிக்கப்பட்ட மாணவர்களும் அடையாளம் காட்டினால், தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று பயந்து, ராகிங் செய்தவர்கள் குறித்து வெளியே சொல்லவில்டில். 

இறுதியில், வழக்கு விசாரணை எந்த முடிவுக்கும் வர முடியாமல் இருந்தது. வழக்கு முட்டுக்கட்டையை நெருங்கிய நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அது மூலம் கிடைத்த ஒரு முக்கிய துப்பு மூலம் எங்களுக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது.

அப்போதுதான், காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேரை கல்லூரிக்குள் பல ரூபங்களில்  அனுப்பினோம். பெண் போலீஸ் ஒருவர் கல்லூரிக்கு மாணவி போல அனுப்பிவைக்கப்பட்டார். அனைத்து மாணவர்களுடனும் நன்கு பேசிப் பழகி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் விவரங்களையும் அவர் திட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், இரண்டு தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்கள் போலவும் பணியில் சேர்ந்து, இந்த ராகிங் கொடுமையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.


 போலீஸார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் காண உதவியிருக்கிறது.

மாணவி போல கல்லூரிக்குச் சென்ற பெண் போலீஸ் ஷாலினி கூறுகையில், நாள்தோறும் நான் கல்லூரிக்குச் செல்வேன். காளிசரன் சார்தான் எனக்கு துணையாக இருப்பார். வெள்ளை மேல்ஆடை அணிந்து கொண்டு, சர்ஜிகல் முகக்கவசம் போட்டுக் கொள்வேன். மருத்துவ மாணவர்களின் புத்தகங்களை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றேன். உணவகத்தில் இருந்து கொண்டே மாணவர்களுடன் பேசிப் பழகி பல்வேறு தகவல்களை திரட்டினேன். 

ஒரு சில வாரங்களில் ஒரு சில குற்றவாளிகள் பற்றி விவரங்கள் தெரிந்துவிட்டன. அவர்கள்தான் மற்ற மாணவர்களை ராகிங் செய்ய வழிநடத்தியிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை வைத்து மற்ற 11 பேரை அடையாளம் கண்டோம் என்கிறார் ஷாலினி.

மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்கள், பெண் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வது போல செய்ய வற்புறுத்தியது, ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் அடிப்பது என பல்வேறு ராகிங் கொடுமை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் கடந்த வாரம் மூன்று மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com