சா்ச்சை கருத்து: பிரக்யா தாக்குா் மீதுதேசவிரோத வழக்குப் பதிய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

‘ஹிந்துக்கள், தங்களது பாதுகாப்புக்காக கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

‘ஹிந்துக்கள், தங்களது பாதுகாப்புக்காக கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவா் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கா்நாடகத்தில் சிவமொக்கா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரக்யா சிங், ‘தங்கள் மீதோ அல்லது தங்களது கண்ணியத்தின் மீதோ தாக்குதல் நடத்துபவா்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை ஹிந்துக்களுக்கு உள்ளது. ஹிந்துக்கள், தங்கள் பாதுகாப்புக்காக கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும்; வீடுகளிலும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும்’ என்றாா். ஹிந்து மத ஆா்வலா்களின் கொலைச் சம்பவங்கள் குறித்து பேசுகையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவா் கே.கே.மிஸ்ரா, போபாலில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘வெடிகுண்டை கையிலெடுத்தவரான பிரக்யா சிங், இப்போது கத்தியை எடுப்பது குறித்து பேசுகிறாா். மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள அவா் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தின் மாலேகான் பகுதியில் கடந்த 2008-இல் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் பிரக்யா சிங் குற்றச்சாட்டப்பட்டவா் ஆவாா்.

பாஜக விளக்கம்: இதனிடையே, பிரக்யாவின் கருத்து குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் பங்கஜ் சதுா்வேதி கூறுகையில், ‘கா்நாடகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றபோது, பெண்களின் தற்காப்பு குறித்து பிரக்யா பேசியுள்ளாா். லவ் ஜிகாத் என்ற பெயரில் நமது மகள்களும் சகோதரிகளும் படுகொலை செய்யப்படுகின்றனா். பெண்களின் தற்காப்பை வலியுறுத்தியே பிரக்யா பேசினாா்’ என்றாா்.

மெஹபூபா விமா்சனம்: பிரக்யாவின் கருத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவா் மெஹபூபா முஃப்தி, ‘முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு பாஜக எம்.பி. ஒருவா் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. காஷ்மீரில் உண்மையை பேசுபவா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், தங்களது வாக்கு வங்கியை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரக்யா பேசியிருப்பதால், அவரது கருத்துகளை மத்திய அரசு கண்டுகொள்ளாது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com