ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைக்க முயலும் ராகுல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு 

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க ராகுல்காந்தி முயல்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் குற்றம்சாட்டியுள்ளார். 
ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைக்க முயலும் ராகுல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு 

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க ராகுல்காந்தி முயல்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் இந்திய ஒற்றுமை பயணம் 100 நாள்களைக் கடந்து தில்லியை அடைந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து கடந்த வாரம் தில்லியை அடைந்தது. 100 நாள்களையும் கடந்து நீடித்துவரும் இந்த நடைபயணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்த நடைபயணம் அடுத்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அமைதியான சூழலை கெடுக்க ராகுல் காந்தி விரும்புகிறாரா? என மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு பகுதிக்கும் தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுக்கு 1.6 கோடி பேர் ஜம்மு காஷ்மீருக்கு வருகின்றனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்கவிட முடிகிறது. 1992ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடி ஆகியோர் ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடியை பறக்கச் செய்தனர்.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த அக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தன. 2011 யாத்திரையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களை காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையிலடைத்தது. அமைதியாக உள்ள காஷ்மீரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது எதனால்? என அனுராக் தாகுல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com