நடப்பாண்டின் இறுதி வாரத்தில் வெளியீட்டிற்காக குவிந்துள்ளன தமிழ்த் திரைப்படங்கள். ஓடிடி தளம், திரையரங்கம் என வேறு வேறு தளங்களில் வெளியாகக் காத்திருக்கும் திரைப்படங்களின் வரிசையில் 30ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது உடன்பால்.
இந்தப் படத்தில் நடிகர்கள் சார்லி, லிங்கா, விவேக் பிரசன்னா, காயத்ரி, அபர்ணதி, தீனா மற்றும் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கியுள்ளார். டி கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | ’விஜய் 67’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல இயக்குநர்
நாயகன் பரமனுக்கு (லிங்கா) தனது தொழிலை மேம்படுத்தவும், கடனை அடைக்கவும் பணம் தேவைப்படுகிறது. இதற்காக தனது தந்தை விநாயகம் (சார்லி) பெயரில் உள்ள வீட்டை விற்க முயற்சிக்க அதற்கு விநாயகம் மறுக்கிறார்.
இதற்கு மத்தியில் வேலைக்கு சென்ற தந்தை விநாயகத்தின் கட்டடம் இடிந்து விழுந்ததாகவும், அதில் இருந்தவர்கள் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகிறது. மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து ரு.20 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்படுகிறது. ஒருபக்கம் அதிர்ச்சியில் உறைந்திருந்தாலும், மற்றொருபக்கம் பணம் கிடைப்பதற்கான திட்டமிடலில் இறங்குகிறது விநாயகத்தின் குடும்பம். அவர்களுக்கு பணம் கிடைத்ததா? விநாயகம் என்ன ஆனார்? என்பதே உடன்பால் திரைப்படத்தின் கதை.
மிகச்சிறிய கதை. ஆனால் அதை எந்தளவு சுவாரஸ்யத்துடன் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவு மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். சீரியஸான கதையாக இருக்கும் இப்படத்தை நகைச்சுவை மூலம் கடத்திச் சென்று பார்வையாளர்களை ரசிக்கச் செய்யும்படி உருவாக்கியிருக்கிறார். திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் காயத்ரி, அபர்ணதி, தீனா, விவேக் பிரசன்னா என ஒவ்வொருவரின் நடிப்பும் படத்திற்கு பலமாக உள்ளது.
இதையும் படிக்க | திருமணம் எப்போது? த்ரிஷா பதில்
குறிப்பாக தனது தந்தை குறித்து உருகும் காயத்ரி அடுத்த நொடியே தனக்கு கிடைக்க வேண்டிய பங்கை கேட்பதும், அதற்காக சண்டையிடுவதுமாக சிறப்பாக நடித்துள்ளார். லிங்காவின் மனைவியாக வரும் அபர்ணதி அளவான, அதேவேளையில் தரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். நகைச்சுவைக்காகவே சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியும் விவேக் பிரசன்னாவும் ஏமாற்றவில்லை.
படம் முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள் மட்டுமே நகர்கிறது. இதுவே சவாலான ஒன்று. ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் இதில் கேமரா பணியாற்றிய மதன் கிறிஸ்டோபருக்கு இயக்குநர் நன்றி சொல்ல வேண்டும்.
பணத்திற்காக தனது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை ஏற்றுக் கொள்ளும் லிங்கா அதேசமயம் அதற்காக குற்றவுணர்ச்சிக்குள்ளாவதாக நடித்திருப்பது தத்ரூபமாக உள்ளது. இதனை தவிர்த்து வெறும் பணம் பணம் என்று மட்டுமே அவர் ஓடிக் கொண்டிருப்பதாகக் காட்சிப்படுத்தியிருந்தால் திரைப்படம் நாடகத்தன்மையுடன் இருந்திருக்கும். இயக்குநர் இதிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
இதையும் படிக்க | 'பதான்’ ஓடிடி விற்பனை இத்தனை கோடிகளா?
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே வகையில் பயணிப்பதால் சீக்கிரம் முடித்திருக்கலாமோ என இரண்டாம் பாதியில் எண்ணத் தோன்றுகிறது. லாஜிக்குகள், தொய்வுகள் இருக்கின்றன. அது எதுவும் பெரிதாக ரசிகர்களை பாதிக்கவில்லை. பின்னணி இசை பெரிதாக நினைவில் நிற்கவில்லை. கிளைமாக்ஸ் காட்சி திடீரென வந்து மறைவது போல இருந்தது. அதற்காக கூடுதலாக உழைத்திருக்கலாம்.
திரையரங்கிற்கு இது இவ்வாறு தோன்றினாலும் ஓடிடி தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கலாம். பணம் மனித வாழ்க்கைக்கு தேவைதான். அதேசமயம் அது மனித உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் கருவியாக எந்தளவு மாறிப் போயிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறது உடன்பால். இந்த வருடத்தின் இறுதியில் தனக்கான நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன்.