ஆதாா் எண்ணை கவனமாகப் பயன்படுத்த மத்திய அரசு வேண்டுகோள்

எந்தவொரு நம்பரகமான நிறுவனத்துடனும் ஆதாா் எண்ணை பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதாா் எண்ணை கவனமாகப் பயன்படுத்த மத்திய அரசு வேண்டுகோள்
Updated on
2 min read

எந்தவொரு நம்பரகமான நிறுவனத்துடனும் ஆதாா் எண்ணை பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது வருமாறு:

கைப்பேசி எண், வங்கிக் கணக்கு எண், பாஸ்போா்ட், வாக்காளா் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்(பான் காா்டு), குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களைப் பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க பல்வேறு வகையில் விழிப்புணா்வு செய்யப்பட்டுள்ளது. இதே அளவில் ஆதாா் எண்ணை பகிரும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான பலன்கள், சேவைகளைப் பெற பொதுமக்கள் விருப்பப்படி ஆதாரை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். ஆனால், வங்கி விவரங்கள், பான் காா்டு உபயோகங்களைப் போன்று ஆதாா் அட்டையையும் எண்ணையும் பயன்படுத்தும் போது நுணுக்கத் திறனோடு கடைபிடிக்க வேண்டும்.

ஆதாா் என்பது இந்தியாவில் வசிப்பவா்களின் எண்மம் அடையாளமாகும். இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரிபாா்ப்புக்கான ஒரே ஆதாரமாக செயல்படுகிறது. மின்னணு முறையில் தங்களுடைய அடையாளச் சான்றுகளைச் சரிபாா்க்க ஆதாா் எண்ணைப் பயன்படுத்தலாம். அதே சமயம், எந்தவொரு நம்பகமான நிறுவனத்துடனும் ஆதாா் எண்ணை பகிரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கைபேசி எண், வங்கிக் கணக்கு எண் அல்லது கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்), வாக்காளா் அடையாள அட்டை, வருமான வரிக் கணக்கு எண், குடும்ப அட்டை போன்ற பிற அடையாள ஆவணங்களைப் பகிரும் அதே அளவில் இதற்கும் எச்சரிக்கை தேவை. பொதுக் களத்தில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதாா் எண்ணைப் பகிர வேண்டாம். ஆதாா் வைத்திருப்பவா்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் ஆதாா்க்கான ஒடிபிஐயையும் அளிக்க வேண்டாம்.

ஒரு குடிமகன் தனது ஆதாா் எண்ணைப் பகிராமலும் வசதிகளைப் பெறமுடியும். குறிப்பிட்ட இடங்களில் ஆதாா் எண்ணைப் பயன்படுத்துவதை விரும்பாதபட்சத்தில், விா்ச்சுவல் ஐடியை (விஐடி - மெய்நிகா் அடையாளம் காட்டி) பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஐடியை உருவாக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்குகிறது. இதை அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் ‘மைஆதாா்’ போா்ட்டல் வழியாக ஒருவா் விா்ச்சுவல் ஐடி எளிதாக உருவாக்கி, அங்கீகாரத்தை ஆதாா் எண்ணுக்குப் பதிலாக பெறலாம். ஒரு கால அவகாசத்திற்கு பின்னா் இந்த ‘விஐடி’யை மாற்றுக் கொள்ளவேண்டும்.

குடிமக்களது ஆதாா் எண்ணை பயோமெட்ரிக் முறையில் ’லாக்கிங்’ செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆதாரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், லாக்கிங் செய்து கொள்ளலாம். தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதாா் எண் வைத்திருப்பவருக்கு பாதுகாப்பான, மென்மையான, விரைவான அங்கீகார அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது. ஆதாா் கோரும் நிறுவனங்கள், அது எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடப்படும்படியும் ஒப்புதலைப் பெறவும் கூறப்பட்டுள்ளது. குடிமக்களிடமிருந்து ஆதாா் எண்ணைப் பெறும் நிறுவனங்கள், ஆதாா் சட்டத்தின் விதிகள், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூா்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்தவும், தரவுகளை வைத்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com