கச்சத்தீவு தேவாலய விழாவில் மீனவா்களுக்கு அனுமதி: அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் கடிதம்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தின் ஆண்டுப் பெருவிழாவில் தமிழக மீனவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
அமைச்சா் ஜெய்சங்கரிடம் டி.ஆா்.பாலு கடிதம்
அமைச்சா் ஜெய்சங்கரிடம் டி.ஆா்.பாலு கடிதம்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தின் ஆண்டுப் பெருவிழாவில் தமிழக மீனவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் எழுதிய கடிதம்:

கச்சத்தீவு புனித அந்தோணியாா் தேவாலயத்தில் ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி அல்லது மாா்ச் மாதங்களில் விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவா்களின் பாதுகாப்பான பயணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தரும். பல்வேறு காரணங்களை முன்வைத்து நிகழாண்டு திருவிழாவில் மீனவா்கள் பங்கேற்க அனுமதி இல்லை என இலங்கை அதிகாரிகள் கூறிய தகவல் தமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக மீனவா்கள் மற்றும் பக்தா்கள் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்துடன் ஆன்மிக, உணா்வுப்பூா்வமான தொடா்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனா். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவா்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் பாரம்பரியமாக நடைபெறும் புனித அந்தோணியாா் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவா்கள் தடையின்றி பங்கேற்க வேண்டும். இதனை இலங்கை அரசிடம் வலியுறுத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவது உறுதி செய்யப்படும் என்று கடிதத்தில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, முதல்வரின் கடிதத்தை மத்திய அமைச்சா் ஜெய்சங்கரிடம் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு நேரில் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com