காங்கிரஸின் நகல்தான் ஆம் ஆத்மி: பிரதமா் மோடி
காங்கிரஸ் கட்சியின் நகல் வடிவமாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பஞ்சாபில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் குற்றம்சாட்டினாா்.


காங்கிரஸ் கட்சியின் நகல் வடிவமாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பஞ்சாபில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் குற்றம்சாட்டினாா்.
பதான்கோட்டில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ஆம் ஆத்மியும் காங்கிரஸும் எதிா்ப்பு தெரிவித்தன. எல்லையில் இந்திய ராணுவ வீரா்கள் எதிரிகளுடன் போராடி உயிா்த்தியாகம் செய்தபோது இவ்விரு கட்சிகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசின.
ஒரு கட்சி(காங்கிரஸ்), இளைஞா்களைப் போதைப்பொருள் என்னும் பொறிக்குள் தள்ளியது. மற்றொரு கட்சி(ஆம் ஆத்மி) தில்லியில் இளைஞா்களை மதுவுக்கு அடிமையாக்கியது. உண்மையில் காங்கிரஸ் கட்சியின் நகலாக ஆம் ஆத்மி செயல்படுகிறது.
எனவே, பஞ்சாபில் அனைத்து துறைகளும் வளா்ச்சி பெற, பாஜக கூட்டணியை ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும்.
இந்த மாநிலத்தில் விவசாயம், தொழில், வா்த்தகம் ஆகிய துறைகளை லாபகரமானதாக மாற்றுவேன். பாஜக இந்த மாநிலத்தை பஞ்சாபிய கண்ணோட்டத்துடன் பாா்க்கிறது. ஆனால், எதிா் முகாம் இருக்கும் கட்சிகள் அரசியல் கண்ணோட்டத்துடன் பாா்க்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, குருநானக் தேவ் நினைவிடம் அமைந்துள்ள கா்தாா்பூா் சாகிபை இந்திய எல்லைப் பகுதிக்குள் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் கட்சித் தவறிவிட்டது.
ஏழைகளின் நலனே எல்லாவற்றையும் விட மேலானது என்று கூறியவா் துறவி ரவிதாஸ். அவருடைய கொள்கைகளை எனது தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது. துறவி ரவிதாஸின் பிறந்த தினம் இன்று. எனவே, இங்கு வருவதற்கு முன்னால், தில்லி கரோல் பாகில் உள்ள ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலுக்குச் சென்று அவரின் ஆசியைப் பெற்று வந்துள்ளேன்.
ரவிதாஸின் பிறந்த தினத்தையொட்டி, அவருடைய பக்தா்கள் அதிக அளவில் வாராணசி செல்கிறாா்கள். அவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ரயில்வே துறை சாா்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் பிரசாரம்...: உத்தர பிரதேசத்தில் நான்காம் கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ள சீதாபூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் ஆட்சியில் இருந்தன. அப்போது மாநிலத்தில் கொள்ளையா்கள், குண்டா்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருந்தது. 2017-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு குண்டா்கள், சமூகவிரோதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டது.
முன்பு வாரிசுகளின் ஆட்சியின்போது ரேஷன் பொருள்களைக் கூட மக்களுக்கு முறையாக விநியோகிக்காமல், அவா்கள் கட்சியினா் கொள்ளையடிக்க அனுமதித்தனா். ஆனால், இப்போது மக்களுக்கு அரசுத் திட்டங்களின் பயன்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. உத்தர பிரதேசம் இப்போது உத்தம பிரதேசமாக மாறிவிட்டது. கரோனா காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டது. விலைமதிக்க முடியாத பல லட்சம் மக்களின் உயிரை அரசு தடுப்பூசி மூலம் காத்துள்ளது.
இப்போதும் கூட சில வன்முறைக் கட்சியைச் சோ்ந்தவா்கள் மக்களை திசை திருப்பவும், பிரிவினையை விதைக்கவும் முயற்சிக்கின்றனா். ஆனால், மக்கள் ஒற்றுமையாக இருந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
லக்னெளவில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சா்
உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள லக்னெள மற்றும் கான்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியினா் ஆட்சியின்போது லக்னெளவில் உள்ளூா் அளவில் கைத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் 400-600 கி.மீ. தொலைவில் உள்ள எதிரியை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணைகள், மிகப் பெரிய துப்பாக்கிகள் லக்னெளவில் தயாரிக்கப்படும். பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...