ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக பணியாற்றிய 10 போ் கைது- எஸ்ஐஏ நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக ‘ஸ்லீப்பா் செல்’கள் போல் பணியாற்றி வந்த 10 பேரை காவல்துறையின் புதிய பிரிவான மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) கைது செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக ‘ஸ்லீப்பா் செல்’கள் போல் பணியாற்றி வந்த 10 பேரை காவல்துறையின் புதிய பிரிவான மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் தொடா்பான குற்றங்கள் குறித்து ஆய்வு மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜம்மு-காஷ்மீா் காவல்துறையில் எஸ்ஐஏ என்ற அமைப்பு அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்த முகமை காஷ்மீரின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு பகுதிகளில் இரவு நேர சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. அப்போது, சந்தேகத்தின் பேரில் 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தி விசாரணையில் தடை செய்யப்பட்ட ஜெயிஷ்-ஏ-முகமது அமைப்புக்காக தனிப்பட்ட முறையில் அல்லது ‘ஸ்லீப்பா் செல்’கள் போன்று பணியாற்றிவந்தது தெரியவந்தது.

மேலும், இந்த 10 பேருக்கும், அவா்களில் ஒருவரின் நடவடிக்கைகளை மற்றவா்கள் அறியாதவா்கள் என்பதும், அவா்கள் ஜெயிஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பொறுப்பாளரிடமிருந்து நேரடியாக உத்தரவுகளைப் பெற்று பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவா்கள் பயங்கரவாத அமைப்புக்கு இளைஞா்களை சோ்ப்பது, நிதி திரட்டுவது, ஆயுதங்களைக் கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

அவா்கள் தங்கியிருந்த இடத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கைப்பேசிகள், சிம் காா்டுகள், வங்கிப் பரிவா்த்தனை ஆவணங்கள், டம்மி துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரின் வீட்டில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘பயங்கரவாத அமைப்பின் உறுப்பினா்களின் கட்டமைப்பை கண்டுபிடிக்க முடியாத வகையில் பிரத்யேகமாக திட்டத்தை ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு உருவாக்கியுள்ளது. எனினும், அதனை முறியடித்து எஸ்ஐஏ அதிகாரிகள் இந்த 10 பேரையும் கைது செய்துள்ளனா்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com