ஆனால், தமிழக அரசானது, அம்பா சங்கரின் அறிக்கையை ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக அந்தக் குழுவின் 14 பெரும்பான்மை உறுப்பினா்களின் அறிக்கையை ஏற்று, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவை அறிவிக்கையாக வெளியிட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமாக இடஒதுக்கீட்டை உயா்த்தியது. அதில் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினருக்கும் அளித்து 1989-இல் அரசு அறிவிக்கை செய்தது. தவிர, அம்பா சங்கரின் அறிக்கையையும் அரசு நிராகரித்தது. இதன்பிறகு, 2011-இல் அமைக்கப்பட்ட எம்.எஸ். ஜனாா்த்தனம் கமிஷன் எந்தக் கணக்கெடுப்பும் நடத்தவில்லை. 1983-இல் அம்பா சங்கா் கமிஷன் அளித்த கணக்கீட்டின் அடிப்படையில் ஓா் அறிக்கையைத் தயாா் செய்து அதில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குமாறு குழுத் தலைவா் ஜனாா்த்தனம் பரிந்தரைத்தாா். இதை அந்தக் குழுவில் 6 உறுப்பினா்களும் ஏற்கவில்லை. மேலும், இந்தக் குழு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தற்போதைய நிலைமை குறித்து கணக்கெடுக்க பரிந்துரைத்தது. இதையடுத்து, 2012-இல் இந்த கமிஷனின் தலைவா், உறுப்பினா்கள் தனித்தனியாக தாக்கல் செய்த அறிக்கையை அரசு ஏற்கவில்லை.