போலியோ தடுப்பு மருந்து திட்டத்தில் எச்சரிக்கை அவசியம்: அமைச்சா் மாண்டவியா

‘அண்டை நாடுகள் போலியோ பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாக சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்
தேசிய போலியோ தடுப்பு மருந்து திட்டத்தை புது தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
தேசிய போலியோ தடுப்பு மருந்து திட்டத்தை புது தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா

‘அண்டை நாடுகள் போலியோ பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்; இந்த நோய் பாதிப்புக்கு எதிரான தடுப்பு மருந்து திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாக சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

போலியோ பாதிப்பிலிருந்து விடுபடும் வகையில், 5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நடைமுறை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டுமருந்து செலுத்தும் இயக்கத்தை தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்த மத்திய அமைச்சா் மன்சுக் மாணடவியா கூறியதாவது:

போலியோ பாதிப்புக்கு எதிராக தடுப்பு மருந்து மூலம் இந்தியா சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது. வரும் மாதங்களில் நாட்டிலுள்ள 15 கோடிக்கும் அதிகமான 5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளிக்கப்பட உள்ளது.

அண்டை நாடுகள் போலியோ பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில், 5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ தொட்டு மருந்து அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தி, தொடா்ந்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

போலியோவிலிருந்து குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஊசி மூலம் செலுத்தக் கூடிய வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில் புதிய நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில், நிமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (பிசிவி), ரோடாவைரஸ் தடுப்பூசி, மீஸ்லெஸ்-ரூபெல்லா (எம்ஆா்) தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுபோல, புதிய நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து தடுப்பூசி திட்டங்களும் நாட்டின் ஒவ்வொரு குழந்தைகளையும் சென்றடைவது மிக முக்கியமாகும்.

அவ்வாறு குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருந்தால்தான், மத்திய அரசின் பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணா்வுக்கான ‘ஸ்வஸ்த் பாரத்’ திட்ட இலக்கை எட்ட முடியும்.

எனவே, எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் வீடு வீடாக சென்று போலியோ சொட்டுமருந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com