
புது தில்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கள் வீரவசனம் பேசிவந்தாலும், உண்மை நிலவரம் சற்று கசப்பு தருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்துவிடாது என்று பாஜகவின் உள்வட்டாரம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம்.
இதையும் படிக்க.. ஸ்நேக் தீவு: மண்டியிடாமல் வீரம் காத்த 13 உக்ரைன் வீரர்கள்
சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி அமைத்திருப்பதும், மத்திய அமைச்சரின் மகன் தொடர்புடைய லக்கிம்பூர் - கேரி வன்முறைத் தாக்குதலும் பாஜகவின் வாக்கு வங்கியை மிக மோசமாக சிதைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாம்.
பின்தங்கிய சமூக மக்களிடையேயும் பாஜகவுக்கு ஆதரவு குறைந்துவிட்டதாகவும், ஜத் மற்றும் யாதவ் மக்கள் அதிகம் நிறைந்த 150 தொகுதிகளில், சமாஜ்வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் கடும் சவாலாக இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறதாம்.
சிறுபான்மையினர் வாக்குகள், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியின் பக்கம் சாய்ந்திருக்கிறது, அதே வேளையில், மிகவும் பின்தங்கிய மற்றும் பின்தங்கிய சமுதாய மக்களின் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி பிரித்திருக்கிறது, இதுதான், நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் பாஜக உள்வட்டாரங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று கட்ட வாக்குப்பதிவிலும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கக் கூடிய தொகுதிகள் பெரிய அளவில் இல்லை. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகள் பெரும்பாலும் சமாஜ்வாதிக்கு ஆதரவானவை. எனினும், உத்தரப்பிரதேசத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் பிரசாரத்தில் ஈடுபடுத்தி, பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரித்து வைத்திருக்கிறோம் என்று பாஜகவின் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, தேர்தலில் வெற்றி பெற்ற சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டியது ஏற்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.