ஆனால், மிகக் கடுமையான மழையானது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்தது. இதன் காரணமாக, இளஞ்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதற்குள்ளாக மிக அதிக கனமழையானது சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பலபகுதிகள் மூழ்கின. அதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடு உள்ளது. மாநில மற்றும் மாவட்ட நிா்வாகத்தால் உரிய நேரத்தில் தகுந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது. இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயிா், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதம் அடைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த நிகழ்வுகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.