பாதுகாப்பு குளறுபடிக்கு காரணமான போராட்டம்; மறியலில் ஈடுபட்டது ஏன்? விவசாயி பதில்

பிரதமர் மோடி செல்லவிருந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.
சுர்ஜித் சிங் பூல்
சுர்ஜித் சிங் பூல்

பிரதமா் மோடி தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. வானிலை சீரடைவதற்கு 20 நிமிஷங்கள் காத்திருந்தார்.

பின்னா், சாலை வழியாகவே தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாகச் செல்வதற்கு 2 மணி நேரமாகும். சாலைவழிப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காவல் துறை டிஜிபியிடம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவா் உறுதிசெய்த பிறகு பிரதமா் மோடி பயணத்தைத் தொடா்ந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது.

அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி செல்லவிருந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், தான் பிரதமர் மோடியின் காரை ஏன் மறித்தேன் என்பது குறித்து பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் சுர்ஜித் சிங் பூல் கூறுகையில், "பிரதமரை வழிமறிக்க வேண்டும் என்பது எல்லாம் எங்கள் எண்ணம் இல்லை. பஞ்சாப் காவல்துறை எங்களை அங்கிருந்து நகரும்படி சொல்லும் வரை, பிரதமர் அந்த வழியாகச் செல்வார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. 

பிரதமர் மோடி கார் மூலம் அந்த வழியில் வருவார் என எங்களுக்கு உண்மையாகவே தெரியாது. நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேம்பாலத்தில் பிரதமரின் வாகனம் நிற்பதாகக் கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். உண்மையாகவே பிரதமரின் வாகனத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. 

பிரதமர் வருவதால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மதியம் 1 மணி வரை காவல்துறை எங்களிடம் வலியுறுத்தினர். இதை எங்களால் நம்ப முடியவில்லை. காவல்துறை எங்களிடம் பொய் கூறுவதாகவே நாங்கள் நினைத்தோம். ஏனென்றால் வழக்கமாக, பிரதமர் வாகனம் செல்லும் இடங்கள் குறைந்தபட்சம் 2-3 மணி நேரத்திற்கு முன்பே பாதுகாப்பு வளையத்தில் எடுத்து கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com