பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்: உயர் பாதுகாப்பு வளையத்தில் தில்லி
பயங்கரவாதத் தாக்குதலுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக உளவுத் துறையினரிடம் இருந்து காவல் துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவை முன்னிட்டு


பயங்கரவாதத் தாக்குதலுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக உளவுத் துறையினரிடம் இருந்து காவல் துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லி - தேசியத் தலைநகர் வலயப் பகுதிகள் மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுகுறித்து புது தில்லி காவல் துணை ஆணையர் தீபக் யாதவ் தெரிவித்ததாவது: குடியரசு தினத்தை முன்னிட்டு, தில்லியில் விழாக் கொண்டாட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் முக அடையாளத்தைக் காண்பிக்கும் மென்பொருளுடன்கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படைகளைத் தவிர உள்ளூர் காவல் துறை, சிறப்புப் பிரிவு, தனிப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் கொண்ட ஸ்வாட் பிரிவு, தேசியப் பாதுகாப்புப் படையின் குழுக்கள் உள்பட தில்லி காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளும் ஈடுபடுத்தப்படும்.
ட்ரோன் கருவி தடுப்பு ஏற்பாடு: இரு வெவ்வேறு இடங்களில் ட்ரோன் கருவி தடுப்பு ஏற்பாடு அமைப்புகளும் போடப்பட்டுள்ளன. உயரமான கட்டடங்களில் கூடுதல் கண்காணிப்புக்காக போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். எதிரி விமானத்தைக் கண்காணிப்பதற்கும், சமாளிப்பதற்கும் வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தப்பட்ட "பிரகார்' வேன்களுடன் ரோந்துக் குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றார் அவர்.
பாதுகாப்பில் கூடுதல் போலீஸார்: தில்லி காவல்துறையின் தகவலின்படி, தில்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து மற்றொரு மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாசவேலை தடுப்பு நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இது வழக்கமான நெறிமுறை என்றாலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு நிகழ்வுக்கும் முன்னதாக அந்த நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம். வரவிருக்கும் குடியரசு தின நிகழ்வை ஒட்டி, எங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.
கூடுதல் கண்காணிப்பு: அண்மையில் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை கருத்தில்கொண்டு, தலைநகரில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் விழிப்புடன் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று, தேசியத் தலைநகர் வலயப் பகுதியிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் அபுதாபியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர்.
மேலும் அண்மையில், பஞ்சாப் மற்றும் காஜிப்பூரில் வெடிபொருள் (ஐஇடி) மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றார் அந்த அதிகாரி.
ஆளில்லா விமானங்கள், பலூன்கள் பறக்கத் தடை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தில்லியில் ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் ஆகியவை ஜனவரி 20 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை வான்வெளியில் இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தில்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...