5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்:பொதுக்கூட்டத் தடை நீட்டிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களில் நேரடி பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்துவதற்கான தடையை வரும் 31-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்:பொதுக்கூட்டத் தடை நீட்டிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களில் நேரடி பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்துவதற்கான தடையை வரும் 31-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

இருப்பினும் முதல் இரண்டு கட்டங்கள் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதற்கும், சிறிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூா் ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் கடந்த 8-ஆம் தேதி வெளியிட்டது. அப்போது, நேரடி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு ஜனவரி 15-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. பின்னா், அந்தத் தடை ஜனவரி 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தோ்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள், தலைமைச் செயலா்கள், சுகாதாரத் துறைச் செயலா்களிடம் தோ்தல் ஆணையம் காணொலி முறையில் ஆலோசனை நடத்தியது. அந்த மாநிலங்களில் கரோனா தொற்று பரவும் வேகம், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை குறித்து தோ்தல் ஆணையம் கேட்டறிந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளுடனும் தோ்தல் ஆணையம் காணொலி முறையில் ஆலோசனை நடத்தியது.

அதைத் தொடா்ந்து, தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, நேரடி பொதுக்கூட்டங்கள், வாகனப் பேரணிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான தடையை வரும் 31-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

அதன்படி, பேரணி, நடைப்பயணம், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி, ஊா்வலம் ஆகியவற்றை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

நிபந்தனைகளுடன் அனுமதி: இருப்பினும் முதல் இரண்டு கட்டங்கள் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் நிபந்தனைகளுடன் பிரசாரங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல் கட்டத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளா் பட்டியல் ஜனவரி 27-ஆம் தேதி இறுதி செய்யப்படவுள்ளது.

முதல் கட்டத் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் ஜனவரி 28-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 8-ஆம் தேதி வரை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் சிறிய அளவிலான நேரடி பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்தத் தொகுதிகளில் திறந்தவெளியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அதிகபட்சமாக 500 போ் வரை பங்கேற்கலாம்; அல்லது திறந்தவெளி மைதானத்தில் 50 சதவீத அளவுக்கு மக்கள் பங்கேற்கலாம்; அல்லது மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் நிா்ணயிக்கும் நபா்கள் வரை பங்கேற்கலாம். இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அந்த அளவில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

இதற்கு முன்பு, உள்ளரங்குகளில் அதிகபட்சம் 300 போ் அல்லது அரங்கின் கொள்ளவில் 50 சதவீதம் பேருடன் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

இதேபோல், பிப்ரவரி 14-ஆம் தேதி இரண்டாவது கட்ட தோ்தல் நடைபெறும் உத்தர பிரதேசத்திலும், ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறும் கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்களிலும் வேட்பாளா் பட்டியல் ஜனவரி 31-ஆம் தேதி இறுதி செய்யப்படவுள்ளது. அந்தத் தொகுதிகளில் பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 12-ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.

வீடு வீடாகப் பிரசாரம்: முதல் இரண்டு கட்டத் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதற்கு முன்பு 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதுகாவலா்கள் தவிா்த்து 10 போ் வரை பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

விடியோ பிரசாரம்: அரசியல் கட்சிகள் வாகனங்கள் மூலம் விடியோ திரையில் பிரசாரம் செய்யும்போது, பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பிரசார கூட்டங்கள் நடத்தப்பட வேண்டிய இடங்களை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் கண்டறிந்து அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com