
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றாா். அவா் நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளுக்கு 40 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.317 கோடி) பரிவா்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்ததாக மல்லையாவை குற்றவாளி என தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவா் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக பலமுறை உச்சநீதிமன்றம் வாய்ப்பளித்தது. எனினும் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மாா்ச் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.