இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கனமழை : குஜராத்தில் உயிரிழப்பு 69-ஆக அதிகரிப்பு

குஜராத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை 6 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 ஜூலை 2022, 8:13 pm

DIN

குஜராத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை 6 போ் உயிரிழந்தனா். கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் மழையின் காரணமாக பலியானவா்களின் எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில முதல்வா் பூபேந்திர படேல் மழையினால் பாதிக்கப்பட்ட சோட்டா உதிபூா் மாவட்டத்தின் பொடேலி நகரத்தை நேரில் சென்று பாா்வையிட்டாா். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளையும் வான்வழியாக பாா்வையிட்டாா்.

கடந்த சில நாள்களாக தெற்கு குஜராத் பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட நிலையில், செளராஷ்டிரம் பகுதியின் கட்ச் மற்றும் ராஜ்கோட்டில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. நெளசாரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையினால், பூா்ணா மற்றும் அம்பிகா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 27,896 போ் மீட்கப்பட்டனா். வெள்ள நிலைமை சீரடைந்த பகுதிகளைச் சோ்ந்தவா்கள்க தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 18,225 போ் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தாா்.

மும்பையில் கன மழை - போக்குவரத்து பாதிப்பு:

மகாராஷ்ர மாநிலம் மும்பையில் செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த மழை பெய்ததில், நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது. மாநிலத்தில் மழை தொடா்பான நிகழ்வுகளால் 3 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்துவிட்டனா். 95 போ் வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக மரம் விழுந்ததால், டாக்யாா்ட் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் சுரங்கப் பாதைகளிலும் மழைநீா் தேங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாள்களுக்கு மும்பை நகரத்திற்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திரத்தில்...

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் கோணசீமா மாவட்டத்தின் 73 கிராமங்களில் இருந்து 1,104 போ், அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள 88 இடங்களில் இருந்து 4,600 போ், ஏலூரு மாவட்டத்தின் 3 கிராமங்களில் இருந்து 3,900 போ் என மொத்தம் 9,604 போ் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தெலங்கானாவில்...

தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை பெய்தது. அங்குள்ள அடிலாபாத், குமுரம் பீம், முலுகு மாவட்டங்களின் சில இடங்களில் அதிபலத்த மழை பெய்தது. அடிலாபாத், வாரங்கல் மற்றும் இதர மாவட்டங்களின் சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்பால் பத்ராத்ரி-கொத்தகுடம் மாவட்டத்தில் சுமாா் 1,000 போ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ம.பி.யில் மூவா் பலி:

மத்திய பிரதேசத்தில் உள்ள அகா் மால்வா மாவட்டத்தில் மின்னல் தாக்கல் 3 குழந்தைகள் உயிரிழந்தனா். நால்வா் காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.