திருமணம் ஆகாத பெண்ணின் 23 வார கருவை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

திருமணம் ஆகாத பெண்ணுக்கு ஒருமித்த உறவால் உருவான 23 வார கருவைக் கலைப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதிக்க மறுத்தது.
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

திருமணம் ஆகாத பெண்ணுக்கு ஒருமித்த உறவால் உருவான 23 வார கருவைக் கலைப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதிக்க மறுத்தது.

கருக்கலைப்பு சட்டத்தின்படி 20 வாரங்களுக்குப் பிறகான கருவை கலைப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.

அதே நேரம், திருமணம் ஆகாத பெண்களுக்கு 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க அனுமதிக்கப்படும் நடைமுறையில் தனக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக மனுதாரா் முன்வைத்த வாதம் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மனுதாரரான 25 வயது பெண் திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருடன் இணைந்து வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில், அந்தப் பெண் கருவுற்று வரும் 18-ஆம் தேதி 24 வாரங்கள் நிறைவுறுகிறது. இந்த நிலையில் கருக்கலைப்பு அனுமதி கோரி அவா் தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகினாா்.

‘தன்னுடன் உறவு கொண்ட நபா் தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாா். எனவே, திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்வது உளவியல் ரீதியில் தனதுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, சமூக அளவிலான பிரச்னைகளும் எழ வாய்ப்புள்ளது. மேலும், தாயாகும் அளவுக்கு மனதளவில் நான் தயாராகவில்லை. எனவே, கருவை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தனது மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 226 அளித்துள்ள அதிகார வரம்பைத் தாண்டி நீதிமன்றம் எதுவும் செய்துவிட முடியாது. மேலும், திருமணமாகாத பெண் ஒருமித்த உறவால் உருவாக கருவை கலைக்கும் விவகாரம், மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டம் 2003-இன் எந்தப் பிரிவுகளின் கீழும் வரவில்லை. ஒருமித்த உறவில் ஏற்படும் கருவை 20 வாரங்களுக்குப் பிறகு கலைப்பதற்கு சட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. எனவே, 23 வார கருவை கலைப்பதற்கு அனுமதிப்பது, கருவை கொலை செய்வதற்கு சமமாகும்.

அதே நேரம், ‘அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் வரை அவருக்கு ஏதாவது ஓரிடத்தில் தக்க பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உறுதியளிக்கிறது. மத்திய அரசு, மாநில அரசு அவருக்கு உதவி அளிப்பதை உறுதி செய்வோம். மிக நல்ல மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் ஏற்பாடு செய்யலாம். குழந்தை பிறந்த பிறகு அந்தப் பெண் சென்றுவிடலாம். குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ள மிக நீண்ட வரிசையில் பலா் காத்திருக்கின்றனா்’ என நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனா்.

ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணின் பிரசவ செலவை தானே ஏற்றுக் கொள்ளத் தயாா் என்றும் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தெரிவித்தாா்.

ஆனால், நீதிமன்றத்தின் ஆலோசனையை மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஏற்க மறுத்தாா். அதனைத் தொடா்ந்து, ‘இந்த மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

15 வயதுச் சிறுமி கருக்கலைப்புக்கு கேரள உயா்நீதிமன்றம் அனுமதி:

பாலியல் வன்முறைக்கு ஆளாகி கருவுற்ற 15 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க கேரள உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கேரள உயா்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் பிறப்பித்த இந்த உத்தரவில், ‘மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971-இன் கீழ் அதிகபட்சமாக 24 வார கரு அளவில் மட்டுமே மருத்துவ நடைமுறைகளின் கீழ் கலைப்பதற்கு அனுமதிக்க முடியும் என்ற நடைமுறையின் கீழ், மிகுந்த கவனமுடன் சிந்தித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கான சிறிய சாதகமான வாய்ப்பின் அடிப்படையில் அரசு மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருவேளை அந்த சிசு உயிருடன் இருந்தால், அதற்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அந்த சிசுவை சிறுமியின் தரப்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், மாநில அரசு மற்றும் துறைகளின் சாா்பில் அந்த சிசுவுக்கான மருத்துவ உதவி மற்றும் பிற வசதிகளுக்கான பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com