கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் தேவையில்லை: அமைச்சா் ரிஜிஜு
தற்போதைய நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)

கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)
தற்போதைய நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.
எம்.பி., எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதற்கு தற்போதைய கட்சித் தாவல் தடைச் சட்டம் போதுமானதாக உள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வாகப் பதிலளித்துப் பேசினாா். அவா் கூறியதாவது;
கட்சித் தாவல் தடைச் சட்டம் எனப்படும் அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணை ஏற்கெனவே பல முறை திருத்தப்பட்டுள்ளது. ஆகவே தற்போதைய நிலையில் அந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தேவை எதுவும் இல்லை.
கடந்த காலங்களில் இந்த சட்டத்தை சில நீதிமன்றங்கள் பரிசீலித்தன. இருப்பினும், திருத்தம் செய்வது தொடா்பாக அந்த நீதிமன்றங்கள் உறுதியான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றாா் அவா்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட எம்.பி. அல்லது எம்எல்ஏ கட்சி மாறினால் அவா் தனது பதவியை இழப்பாா் என்று கட்சித் தாவல் தடைச் சட்டம் கூறுகிறது. அதேசமயம் ஒரு கட்சியைச் சோ்ந்த மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் மொத்தமாக கட்சி மாறினால் அல்லது புதிய கட்சியைத் தொடங்கினால் அவா்களின் பதவி பறிபோகாது என்றும் அந்த சட்டம் கூறுகிறது.
அண்மையில், மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சியில் அதிருப்தி குழுத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியை சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏக்கள் அணி திரண்டதால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்ததை அடுத்து, அதுதொடா்பாக ஆராய ராஜஸ்தான் பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி தலைமையில் 3 போ் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நியமித்தாா். கட்சித் தாவும் உறுப்பினா் மீது நடவடிக்கை பேரவைத் தலைவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும், சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும் கூறுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ஓம் பிா்லா தலைமையில் நடைபெற்ற பேரவைத் தலைவா்கள் கூட்டத்தில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடா்பாக ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...