கேரளத்தில் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்த ஒரே எம்எல்ஏ யார்?

கேரளத்தில் மொத்தமுள்ள 140 எம்எல்ஏக்களில், சிபிஐ(எம்) அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு எம்எல்ஏ மட்டும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளார்.
கேரளத்தில் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்த ஒரே எம்எல்ஏ யார்?
கேரளத்தில் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்த ஒரே எம்எல்ஏ யார்?

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு வெற்றி பெற்றாா். கேரளத்தில் மொத்தமுள்ள 140 எம்எல்ஏக்களில், சிபிஐ(எம்) அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு எம்எல்ஏ மட்டும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளார்.

கேரளத்தில் சிபிஐ(எம்) கட்சிக்கு 99 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, கேரளத்தில் பதிவான வாக்குகளில் 149 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு வாக்களித்திருந்த நிலையில், ஒருவர் மட்டும் முர்முவுக்கு வாக்களித்திருந்தார்.

அந்த எம்எல்ஏ யார் என்பது குறித்து வழக்கம் போல சமூக வலைத்தளங்களில்  பல புரளிகள் பரவின. 

ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியின் தேசியத் தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவெடுத்திருந்ததால், கேரளத்தில் இருக்கும் அந்த கட்சியின் இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவர்தான் முர்முவுக்கு வாக்களித்திருப்பர் என்று கூறப்பட்டது. ஆனால் இருவரும் தங்களது வாக்குகளை சின்ஹவுக்கு அளித்ததை உறுதி செய்துள்ளனர்.

அடுத்த அரசியல் கணிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்த மணி சி. கப்பன் வாக்களித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதையெல்லாம் தாண்டி முர்மு பெண் வேட்பாளர் என்பதால், கேரளத்தில் இருக்கும் பெண் எம்எல்ஏக்களில் ஒருவர்தான் அவருக்கு வாக்களித்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

வாக்குச்சீட்டுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின்வசம் இருக்கும் நிலையில், நீதிமன்றம் உத்தரவிடும்பட்சத்தில், கேரளத்தில் பதிவான வாக்குச்சீட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டால்தான் அந்த ஒரே ஒருவர் யார் என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு

64 வயதாகும் திரெளபதி முா்மு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்து குடியரசுத் தலைவா் பதவிக்கு வரும் முதல் தலைவராவார்.

இந்தத் தோ்தலில் திரெளபதி முா்மு 64 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.

தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, 10 மாநிலங்களின் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே வெற்றிக்குத் தேவையான வாக்குகளை திரெளபதி முா்மு பெற்றுவிட்டாா். இறுதி முடிவின்போது திரெளபதி முா்மு மொத்தம் 6,76,803 (64.03%) வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹ 3,80,177 (36%) வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பதிவான எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்களின் வாக்குகளில் திரெளபதி முா்மு 2,824 எம்எல்ஏ-க்களின் வாக்குளையும், 540 எம்.பி.க்களின் வாக்குகளையும் பெற்றாா். யஷ்வந்த் சின்ஹா 1,877 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும், 208 எம்.பி.க்களின் வாக்குகளையும் பெற்றாா்.

38 எம்எல்ஏ-க்கள், 15 எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 53 பேரின் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

எந்த மாநிலத்தில் அதிக வாக்கு?

ஓா் எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700. எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முா்முவுக்கு அதிக வாக்கு சதவீதம் கிடைத்தது.

ஆந்திர பிரதேசம், சிக்கிமில் அனைத்து எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் முா்மு பெற்றாா். யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேற்கு வங்கம், தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கிடைத்தது. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 17 எம்.பி.க்கள் திரெளபதி முா்முவுக்கு வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com