பேரிடர்களை கடந்து முதலிடம் பிடித்த தாஜ் மஹால்: எதில் தெரியுமா?

நாட்டில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்களையும் பின்னுக்குத் தள்ளி, தாஜ் மஹால் வருவாயில் முதலிடம் பிடித்துள்ளது.
முதலிடம் பிடித்த தாஜ் மஹால்
முதலிடம் பிடித்த தாஜ் மஹால்

புது தில்லி: நாட்டில் கரோனா பேரிடர் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்திருந்த போதும் கூட, நாட்டில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்களையும் பின்னுக்குத் தள்ளி, தாஜ் மஹால் வருவாயில் முதலிடம் பிடித்துள்ளது.

அதாவது, தில்லியில் உள்ள செங்கோட்டையைக் காட்டிலும் 5 மடங்கு வருவாயையும், தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் மற்றும் புவனேஸ்வரத்தில் உள்ள சூரியனார் கோயிலைக் காட்டிலும்  10 மடங்கு வருவாயையும் தாஜ் மகால் பெற்றுள்ளது.

நாட்டிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ் மஹால் 2022ஆம் நிதியாண்டில் ரூ.25 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. கடந்த 2020ஆம் நிதியாண்டைக் காட்டிலும் இது 73 சதவீதம் குறைவாகும். அதாவது 2020ஆம் ஆண்டில் தாஜ் மஹாலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் ரூ.97 கோடி வருவாய் ஈட்டப்பட்டதும், கரோனா பேரிடர் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக வருவாய் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2019 - 2022 வரையிலான காலக்கட்டத்தில் தாஜ் மஹாலின் நுழைவுக் கட்டணம் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.132 கோடியாகும். இதனால், 2019 - 2022ஆம் ஆண்டு காலத்தில் இந்திய தொல்லியல் துறையின் மொத்த வருவாயில் தாஜ் மஹாலின் பங்கு மட்டும் 24 சதகூதமாகும். 

நாட்டில் ஒட்டுமொத்தமாக 3,693 நினைவுச் சின்னங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 143 இடங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தாஜ் மஹாலைத் தவிர்த்து செங்கோட்டை, குதுப்மினார், ஆக்ரா கோட்டை, மாமல்லபுரம், சூரியனார் கோயில், சித்திரக்கூடம் கோட்டை, எல்லோரா குகைகள், கோல்கெண்டா கோட்டை உள்ளிட்டவையும் இந்திய தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் பகுதிகளாக உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com