'அன்று பிரிட்டிஷார்; இன்று மோடி அரசு' - அமலாக்கத் துறை சம்மன் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுலுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நேஷனல் ஹெரால்டு பணமோசடி விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுலுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவருடைய மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், ராகுல் காந்தி நாளையும், சோனியா காந்தி வருகிற ஜூன் 8 ஆம் தேதியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரிடம் இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, ' பொம்மை ஏஜென்சிகளை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை மிரட்டும் வகையில் பாஜக செயல்படுகிறது. சுதந்திர நாள்களுக்குச் செல்லும் பின்னோக்கிய வரலாறு நேஷனல் ஹெரால்டுக்கு இருக்கிறது. மம்தா பானர்ஜி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்திய ஏஜென்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 

2015ல் நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைத்தது. ஆனால் மத்திய அரசு அதை விரும்பாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு, புதிய அதிகாரிகளை வரவழைத்து வழக்கை மீண்டும் துவக்கியது. பணவீக்கம் மற்றும் இதர நாட்டின் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் இது உள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நாங்கள் பயப்பட மாட்டோம், தலைவணங்க மாட்டோம் என்றும் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், '1942ல் நேஷனல் ஹெரால்டு நாளிதழை ஆரம்பித்தபோது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர், இன்று மோடி அரசும் அதையே செய்கிறது. அதற்கு அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறது' என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com