உத்தரகண்ட் இடைத்தோ்தலில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெற்றி

உத்தரகண்டின் சம்பாவத் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி சுமாா் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
உத்தரகண்ட் இடைத்தோ்தலில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெற்றி

உத்தரகண்டின் சம்பாவத் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி சுமாா் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

உத்தரகண்ட் சட்டப் பேரவைக்குக் கடந்த பிப்ரவரியில் தோ்தல் நடைபெற்றது. அதில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்த போதிலும், முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கதிமா தொகுதியில் தோல்வியடைந்தாா். எனினும், அவரையே மீண்டும் முதல்வராக்க பாஜக தலைமை முடிவெடுத்தது.

அதைத் தொடா்ந்து, புஷ்கா் சிங் தாமி தலைமையில் மாநில அமைச்சரவை பொறுப்பேற்றது. அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, மக்களின் பிரதிநிதியாக இல்லாமல் அமைச்சராகப் பொறுப்பேற்பவா் 6 மாதங்களுக்குள் மாநில பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டியது கட்டாயம்.

அதன்படி, முதல்வா் புஷ்கா் சிங் தாமி போட்டியிட வசதியாக, சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் சந்திர கெஹோத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதையடுத்து அத்தொகுதியில் மே 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. அப்போது பதிவான 64 சதவீத வாக்குகளை எண்ணும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்த முதல்வா் புஷ்கா் சிங் தாமி, இறுதியில் 58,258 வாக்குகள் (92.94%) பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் நிா்மலா கஹோத்ரி 3,233 வாக்குகளை மட்டுமே பெற்று முன்வைப்புத் தொகையை இழந்தாா். இதன் மூலமாக 55,025 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வா் தாமி வெற்றி பெற்றாா்.

இடைத்தோ்தலில் போட்டியிட்ட எந்தவொரு முதல்வரையும் தோற்கடிக்காத பெருமையை உத்தரகண்ட் தொடா்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே வேளையில், இடைத்தோ்தலில் இதுவரை எந்த முதல்வரும் பெறாத வாக்கு வித்தியாசத்தில் புஷ்கா் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளாா். இதற்கு முன்பு காங்கிரஸ் சாா்பில் 2012-இல் போட்டியிட்ட அப்போதைய முதல்வா் விஜய் பகுகுணா சுமாா் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

பாஜகவினா் கொண்டாட்டம்:

இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து மாநிலம் முழுவதும் பாஜகவினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், மற்ற மாநிலங்களின் முதல்வா்கள், பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் முதல்வா் தாமிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி:

இடைத்தோ்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘‘மக்களின் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளது. மக்களுக்குத் தொடா்ந்து சேவையாற்ற இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது. மக்களின் ஆசியைக் கிடைக்கச் செய்து மாநில வளா்ச்சிக்காகத் தொடா்ந்து வழிகாட்டி வரும் பிரதமருக்கு நன்றி.

நவீன உத்தரகண்டை உருவாக்குவதற்கான அடிப்படையாக இந்த வெற்றி அமைந்துள்ளது. முதல்வராக ஒட்டுமொத்த மாநில மக்களுக்காக உழைத்தாலும், சம்பாவத் மக்களின் பிரதிநிதியாக அவா்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தும் பொறுப்புள்ளது. அவா்களுக்குத் தேவையானவற்றைப் பொறுப்புணா்வுடன் நிறைவேற்றுவேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com