என்டிபி வங்கியின் ஐஆர்ஓ இயக்குநராக தமிழர் நியமனம்

பிரிக்ஸ் நாடுகளின் நியூ டெவலப்மென்ட் வங்கி, கிஃப்ட் நகரில் அமைத்துள்ள இந்தியப் பிராந்திய அலுவலக (ஐஆர்ஓ) இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் தமிழருமான டி.ஜே. பாண்டியனை நியமித்துள்ளது.
என்டிபி வங்கியின் ஐஆர்ஓ இயக்குநராக தமிழர் நியமனம்
Updated on
1 min read


பிரிக்ஸ் நாடுகளின் நியூ டெவலப்மென்ட் வங்கி, குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் (கிஃப்ட் நகர்) அமைத்துள்ள இந்தியப் பிராந்திய அலுவலக (ஐஆர்ஓ) இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் தமிழருமான டி.ஜே. பாண்டியனை நியமித்துள்ளது.

ஷாங்காயைத் தலைமையகமாகக் கொண்டுள்ள நியூ டெவலப்மென்ட் வங்கி, கிஃப்ட் நகரில் இந்தியப் பிராந்திய அலுவலகத்தை (ஐஆர்ஓ) அமைப்பதற்கானத் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தது. இந்தியாவில் 20 திட்டங்களுக்கு நியூ டெவலப்மென்ட் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்களைப் பயனுள்ள வகையில் திறம்பட செயல்படுத்துவதற்கும், திட்டத்தை செயல்படுத்தும் ஏஜென்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் ஐஆர்ஓ உதவவுள்ளது.

மேலும் புதிய திட்டங்களைத் தயாரிப்பதிலும், அரசு நிறுவனங்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதிலும் ஐஆர்ஓ முக்கியப் பங்காற்றவுள்ளதாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், "ஐஆர்ஓ அமைக்கப்பட்டுள்ளது நியூ டெவலப்மென்ட் வங்கியின் முக்கியமான ஒரு மைல்கல். தலைமையகத்துக்கு அப்பாற்பட்டு, மற்ற பிரிக்ஸ் நாடுகளிலும் பிராந்திய அலுவலகங்களை அமைக்க வேண்டும் என வங்கி நிறுவனர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதை இது குறிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டி.ஜே. பாண்டியன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் குஜராத் தலைமைச் செயலராக இருந்துள்ளார். பிறகு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அலுவலராக இருந்துள்ளார். இதில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பங்குதாரராக இருப்பது இந்தியா. டி.ஜே. பாண்டியனுக்குப் பிறகு இந்தப் பொறுப்பை வகித்தது ஆர்பிஐ முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com