இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது யோகா: பிரதமர் மோடி

யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, யோகா, இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது என்றார்.
இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது யோகா: பிரதமர் மோடி
இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது யோகா: பிரதமர் மோடி
Updated on
2 min read

மைசூரு: எட்டாவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மைசூரில் செவ்வாய்க்கிழமை 15,000-க்கும் மேற்பட்டோா் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, யோகா, இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது என்றார்.

பிரதமர் மோடியுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொள்ள பல ஆயிரக்கணக்கானோர் மைசூரு அரண்மனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, இந்த ஒட்டுமொத்த உலகமும், நமது உடலிலிருந்தும், ஆன்மாவிலிருந்தும்தான் தொடங்ககிறது. இந்த உலகமே நம்மிடமிருந்துதான் தொடங்குகிறது.

மற்றும், இந்த யோகாதான், நமக்குள் இருக்கும் அனைத்தையுமே நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. யோகா நமக்கு அமைதியைக் கொடுக்கிறது.  யோகா ஏற்படுத்தும் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, நமது சமூகத்துக்கே யோகா அமைதியைக் கொடுக்கிறது. இந்த நாட்டுக்கும், உலகத்துக்கும் அமைதியைக் கொடுக்கிறது யோகா. மற்றும் இந்த பிரபஞ்சத்துக்கே அமைதியைக் கொடுப்பது யோகாதான் என்று மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

சர்வதேச யோகா நாள்

மனித நேயத்துக்கு யோகா என்ற பொருளில் இந்த ஆண்டின் சா்வதேச யோகா தினம் பல புதுமைகளை காணவுள்ளது. ‘காா்டியன் ரிங்’ எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெறவுள்ளது. காா்டியன் ரிங் நிகழ்ச்சி என்பது உலகில் உள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு, சுற்றுவட்ட முறையில் யோகா செயல்முறை விளக்கம் நடத்தப்பட உள்ளதைக் குறிக்கிறது.

கிழக்கில் ஃபிஜி தீவுகளில் தொடங்கி, மேற்கு நோக்கி நகா்ந்து, இறுதியில் அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இந்த சுற்றுவட்டப் பாதை நிறைவுறும். இந்த நிகழ்வு முழுமையும் தூா்தா்சன் தொலைக்காட்சி சேனலில் அதிகாலை 3 மணி முதல், இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி) நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டின் சா்வதேச யோகா தின நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்தும் சுமாா் 25 கோடி போ் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்திலும் நாட்டின் பல்வேறு பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்றுள்ள நகரங்களில் மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் பாறையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், வெளியுறவு மற்றும் கலாசார துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி சிறப்பு விருந்தினராகவும், தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி சிறப்பு விருந்தினராகவும், மகாபலிபுரத்தில் கடற்கரை கோவில் அருகே நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் அ.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டுள்ளனர்.

கோவையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், காணொலி முறையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com