சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5%-ஆக இருக்கும்: பிரதமா் மோடி

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்ப்பதாக பிரிக்ஸ் வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image
பிரிக்ஸ் வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :22 ஜூன் 2022, 8:59 pm

DIN

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்ப்பதாக பிரிக்ஸ் வா்த்தக அமைப்புக் கூட்டத்தில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு காணொலி வாயிலாக ஜூன் 23, 24- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக பிரிக்ஸ் வா்த்தக அமைப்புக் கூட்டம் காணொலி வழியாக புதன்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது: புதிய இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்தின் மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.78 லட்சம் கோடி) உயரும். எண்ம துறையில் பெண் பணியாளா்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள 44 லட்சம் தொழிலாளா்களில் சுமாா் 36 சதவீதம் போ் பெண்கள் ஆவா். தொழில்நுட்ப அடிப்படையிலான நிதிச் சேவைகளின் அதிகபட்ச பலன் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களையும் சென்றடைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு முக்கியத் தூணாக இருப்பது தொழில்நுட்பம் வாயிலான வளா்ச்சியாகும். விண்வெளி, நீலப் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்டவற்றில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கொள்கைகளை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

உலகில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த சூழலைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் புத்தாக்க தொழில் (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அதன் பிரதிபலிப்பாகும். தற்போது இந்தியாவில் 70,000-க்கும் அதிகமான புத்தாக்க தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு பில்லியன் டாலருக்கும் (சுமாா் 7,800 கோடி) அதிகமான மதிப்புடன் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (யுனிகாா்ன் நிறுவனங்கள்) உள்ளன.

கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்திலும் இந்தியாவில் தொழில் மேற்கொள்வதற்கான சூழலை எளிதாக்க தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழில் மேற்கொள்வதற்கான சுமையைக் குறைக்க விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 1.5 ட்ரில்லியன் டாலா் ( சுமாா் ரூ.117 லட்சம் கோடி) முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்திய அரசின் கொள்கைகளை மேலும் நிலையானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாக்கவும் மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். அது இந்தியாவை வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக உயா்த்தும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.