மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கு நெருக்கடி: இன்று அமைச்சரவை கூட்டத்துக்கு தாக்கரே அழைப்பு

மகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதை அடுத்து, புதன்கிழமை மதியம் 1 மணியளவில் அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். 
மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கு நெருக்கடி: இன்று அமைச்சரவை கூட்டத்துக்கு தாக்கரே அழைப்பு


மும்பை: சிவசேனையின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால், மகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதை அடுத்து, புதன்கிழமை மதியம் 1 மணியளவில் அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அண்மையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களையும், சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா ஓரிடத்தையும் கைப்பற்றின. பாஜகவுக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனை வேட்பாளரைத் தோற்கடித்து பாஜக கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது.

அதேபோல், மாநில சட்டமேலவைத் தேர்தலிலும் பாஜக 4 இடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது. அதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் ஒத்துழைப்பு காணப்படவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டினர். தேர்தலின்போது சிவசேனையை சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், சிவசேனையை சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களான சுமார் 15 எம்எல்ஏ-க்களுடன் குஜராத்தின் சூரத்தில் முகாமிட்டுள்ளார். அவர்களைத் தற்போது தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. 

இதனிடையே, முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளர்களான மிலிந்த் நர்வேகர் மற்றும் ரவீந்திர பாதக் ஆகியோர் அடங்கிய சிவசேனை குழுவும் சூரத்தில் ஷிண்டே மற்றும் பிற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்தனர்.

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்காத நிலையில், அவர் பாஜகவில் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாஜக ஆட்சியமைப்பதற்காக ஏக்நாத் ஷிண்டே ஆதரவு தர முன்வந்தால், அதுகுறித்து நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.

ஷிண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து "சிவசேனை"யையும் நீக்கியுள்ளார். தானே பகுதியில் அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய இவர், 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து சிவசேனை பிரிந்த பிறகு மகாராஷ்டிரம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் ஷிண்டே கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே ஷிண்டே ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனிடையே, சிவசேனை தலைவர்கள் மகாராஷ்டிர சட்டப்பேரவை துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வாலை சந்தித்து, ஏக்நாத் ஷிண்டேவை சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை நியமிக்க கோரி கடிதம் கொடுத்தனர். 

இதனிடையே, சூரத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டே, 33 கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் 7 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் விமானம் மூலம் புதன்கிழமை காலை அசாமின் கவுகாத்திக்கு வந்துள்ளதாகவும், பாலாசாகேப் தாக்கரேவின் இந்துத்துவாவை தாங்கள் கொண்டு செல்வதாகவும் ஷிண்டே புதன்கிழமை கூறினார்.

இந்நிலையில், மகாராஷ்டிர கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் சிவசேனையின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் சேரலாம் என்ற ஊகங்கள் பரவி வரும் நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். 

அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெறும். இதில், அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் தாக்கரே கூறியுள்ளார். 

முன்னதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் தொடர்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களையும் வர்ஷா பங்களாவுக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர். 

ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சிவசேனை எம்.எல்.ஏக்கள் சென்றதால், "தொழில்நுட்ப ரீதியாக" மாநில அரசு "சிறுபான்மை" நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், பாஜக தற்போது "காத்திருந்து பார்த்துக் கொள்ளும்" நிலையில் இருப்பதாகக் கூறிய அவர், பாஜகவிடமிருந்தோ அல்லது ஷிண்டேவிடமிருந்தோ ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த முன்மொழிவும் வரவில்லை.

தற்போது "உடனடியாக எதையும் கூறமுடியாது, நாங்கள் தற்போது காத்திருக்கிறோம் மற்றும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். ஆனால், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். பாஜக தலைவர் மேலும் கூறினார்.

2019 ஆம் ஆண்டு வரை பாஜகவும் சிவசேனாவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பிறகு, முதல்வர் பதவிப் பிரச்னையில் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com