கர்நாடக  முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

‘மத வெறுப்புப் பிரசாரங்களைத் தடுத்து நிறுத்துங்கள்’: கர்நாடக முதல்வருக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்

கர்நாடகத்தில் நிகழ்ந்துவரும் மதரீதியிலான வெறுப்பு பிரசாரங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி எழுத்தாளர் உள்ளிட்ட சமூகத்தின் மதிப்புமிக்க 75 பேர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர்
Published on

கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துவரும் மதரீதியிலான வெறுப்பு பிரசாரங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் மதிப்புமிக்க 75 பேர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக மதத்தை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை, கோவில் பகுதிகளில் இஸ்லாமியர்கள் கடைகளை அமைக்கத் தடை உள்ளிட்டவை அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட 75 பேர் கையொப்பமிட்ட கடிதம் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதப்பட்டுள்ளது.

திறந்த மடலாக எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, கல்வியாளர் எல்லப்பா ரெட்டி, வழக்கறிஞர் ரவிவர்மா குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ரகுநந்தன் மற்றும் சிரஞ்சீவி சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜய் குமார் சிங், எழுத்தாளர்கள் சசி தேஷ்பாண்ட், வைதேகி, இயக்குநர் கிரீஷ் கசரவல்லி உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர். 

மாநிலத்தில் மதவெறுப்பு பிரசாரங்களை தடுக்க வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் சமீபகாலமாக கர்நாடகத்தில் அமைதி, பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ந்துவரும் மதரீதியான சர்ச்சைகள் தங்களை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகத்தில் நிகழும் இத்தகைய விஷமத்தனமான பிரசாரங்கள் மாநிலத்தின் பாரம்பரியமான தோற்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அந்தக் கடிதத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள மதசுதந்திரத்தை உறுதி செய்வதுடன் இவற்றுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை உறுதியான நிலைப்பாட்டுடன் களைய மாநில அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com