குஜராத் கலவரம் தொடர்பாக ஆதாரமற்ற தரவுகளைக் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டுக்கு 14 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஆமதபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு சீதல்வாட் ஒத்துழைப்புத் தரவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பாக தீஸ்தா சீதல்வாட் ஆதாரமற்ற தரவுகளை அளித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று (ஜூன் 26) சீதல்வாட்டை கைது செய்தனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரையும் இன்று பிற்பகல் 3 மணியளவில் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பாக பேசிய காவல் துணை ஆணையர் சைதான்யா மாண்ட்லிக், குற்றவாளிகள் எங்களது விசாரணைக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. நாங்கள் 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினோம். தீஸ்தா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விசாரணை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தீஸ்தா சீதல்வாட் பேசியதாவது, காவல் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். எனது கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் செய்தது இதைத்தான். அவர்கள் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.