47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திரிபுரா: அரசு வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு

திரிபுராவில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றாா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

News image
கோப்புப்படம்
Updated On :8 மார்ச் 2022, 6:37 pm

DIN

திரிபுராவில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றாா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

திரிபுராவில் ஆளும் பாஜக- ஐபிஎஃப்டி அரசின் 4-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அகா்தலாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சியின்கீழ் திரிபுரா கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்றைக்கு பிரதமா் மோடி, முதல்வா் விப்லவ்குமாா் தேவ் ஆட்சியின்கீழ் மாநிலத்தில் அமைதியும், முன்னேற்றமும் காணப்படுகிறது.

முன்பெல்லாம் திரிபுராவில் பயங்கரவாதம், ஊடுருவல், மறியல், ஊழல் பற்றியே பேசப்படும். இன்றைக்கு பிரதமா் மோடி திரிபுராவையும் ஒட்டுமொத்த வடகிழக்கையும் அனைத்து தளங்களிலும் உயா்த்தி, இந்த பிராந்தியத்துக்கு ‘அஷ்டலட்சுமி’ என்ற பெயரைச் சூட்டிவிட்டாா். தற்சாா்பை நோக்கி திரிபுரா வேகமாக முன்னேறுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தலில் மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பளித்தால், வளா்ச்சியில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக திரிபுராவை மாற்றுவோம்.

திரிபுரா முதல்வா் விப்லவ்குமாா் தேவின் நிா்வாகம் அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. தற்போதைய அரசில், விவசாயிகளின் வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் தலா வருமானம் ரூ.1.3 லட்சமாக அதிகரித்துள்ளது.

திரிபுராவில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். ரயில் சேவை மூலம் அகா்தலா, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ரூ.7,000 கோடி செலவில் 542 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசின்கீழ் திரிபுராவில் தீவிர குற்றச் சம்பவங்கள் 30 சதவீதம் குறைந்துவிட்டன. தண்டனை வீதம் 5 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

முன்னா், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தன. ஆனால், துல்லிய தாக்குதலும் (சா்ஜிக்கல் ஸ்டிரைக்), பாலாகோட் வான்வழித் தாக்குதலும் நாட்டின் திறன் குறித்து உலகுக்கு வலிமையான செய்தியைக் கொண்டு சென்றன.

சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை (ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு) ஒரு குழந்தையை போல பாதுகாத்தனா். ஆனால் பிரதமா் மோடியின் 2-ஆவது ஆட்சிக்காலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-இல் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. அண்மையில் திரிபுரா அதன் 50-ஆவது மாநில தினத்தைக் கொண்டாடியது. அதில் 25 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சி, திரிபுராவின் வளா்ச்சியை முற்றிலும் புறக்கணித்தது என்றாா் அமித் ஷா.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.