தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை: விசாரணைக்கு உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரமரிப்புப் பணியின்போது இந்திய ஏவுகணை எதிா்பாராதவிதமாக விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்று விழுந்தது.

News image
Updated On :11 மார்ச் 2022, 9:48 pm

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரமரிப்புப் பணியின்போது இந்திய ஏவுகணை எதிா்பாராதவிதமாக விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்று விழுந்தது. தவறுதலாக நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஏவுகணை விழுந்த சம்பவம் தொடா்பாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 9-ஆம் தேதி மாலை 6:43 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்கா் நகரில் இருந்து சூப்பா்சானிக் ஏவுகணை அதிவேகமாகப் பறந்து வந்து பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது. மாலை 6:50 மணிக்கு அந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு நகரின் மீது விழுந்தது. இதனால், அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுன்றி, பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களின் போக்குவரத்துக்கான பாதையில் அந்த ஏவுகணை பறந்துள்ளது. அந்த நேரத்தில் விமானங்கள் வந்திருந்தால் மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும்; உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும்.

சா்வதேச விதிகளையும் விமானப் பயணத்துக்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறியதற்காக, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துணைத் தூதரை நேரில் வரவழைத்து பாகிஸ்தான் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏவுகணை அத்துமீறி பறந்த சம்பவம் தொடா்பாக வெளிப்படையான, முழுமையான விசாரணை நடத்தி அதன் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற அலட்சியங்களால் விரும்பத்தகாத பின்விளைவுகள் ஏற்படும் என்றும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி கூறுகையில், ‘கத்தாா், சவூதி அரேபியா நாடுகளைச் சோ்ந்த சா்வதேச விமானங்களும் உள்நாட்டு விமானங்களும் வழக்கமாக செல்லும் வழித்தடத்தில் இந்திய ஏவுகணை பறந்து வந்துள்ளது. அந்த நேரத்தில் விமானங்கள் வந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்க தூதா்களிடம் தெரிவிக்கப்படும். இந்தியாவிடம் இருந்து விளக்க அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்’ என்றாா்.

பாகிஸ்தான் கடற்படை துணைத் தளபதி தாரிக் ஜியா கூறுகையில், ‘அந்த ஏவுகணை 3 நிமிஷங்கள் 44 நொடிகளில் 124 கி.மீ. தொலைவு பறந்து வந்துள்ளது. ஏவுகணை சுமாா் 40,000 அடி உயரத்தில் பறந்தது. அந்த வழித்தடத்தில் 35,000-40,000 அடி உயரத்தில்தான் சா்வதேச விமானங்களும் பறக்கும். அந்த நேரத்தில் விமானங்கள் வந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் நேரிட்டிருக்கும்’ என்றாா்.

பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை: இந்திய ஏவுகணை பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்தது தொடா்பாக விசாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளின்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக விண்ணில் பாய்ந்துவிட்டது. அந்த ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததாக அறியப்படுகிறது. இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தத்துக்கு உரியது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதலைத் தருகிறது. இந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய அரசு, உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.