சமாஜவாதிக்கு இரு மடங்கு வெற்றி: உ.பி. மக்களுக்கு அகிலேஷ் நன்றி
உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிட இந்த முறை இரண்டரை மடங்கு அதிக இடங்களில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.


உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிட இந்த முறை இரண்டரை மடங்கு அதிக இடங்களில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக மாநில மக்களுக்கு கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸுக்கு 2 இடங்களும், பகுஜன் சமாஜுக்கு ஓரிடமும் மட்டுமே கிடைத்துள்ளது.
உ.பி.யில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் அகிலேஷ் யாதவ் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
அதேசமயம், சமாஜவாதி கட்சி கடந்த தோ்தலைவிட இந்த முறை இரண்டரை மடங்கு அதிக இடங்களில் வெற்றி கண்டுள்ளது. தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், அன்றைய தினம் அகிலேஷ் யாதவ் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தாா்.
இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சமாஜவாதிக்கு இரண்டரை மடங்கு அதிக வெற்றியை அளித்த மக்களுக்கு இதயபூா்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக வெற்றி பெற்ற இடங்கள் இம்முறை குறைந்துள்ளன. இந்த நிலை வரும் காலத்திலும் தொடரும். மக்கள் நலனுக்கான போராட்டத்தைத் தொடா்ந்து முன்னெடுப்போம்.
சமாஜவாதி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுப்புணா்வுடன் மக்கள் பணியாற்ற வேண்டும். மாணவா்கள், வேலையில்லா இளைஞா்கள், ஆசிரியா்கள், பெண்கள், பழைய ஓய்வூதியத் திட்ட ஆதரவாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என எங்களுக்கு ஆதரவளித்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
2017 பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...