உ.பி., உத்தரகண்ட், மணிப்பூா் முதல்வா்கள் ராஜிநாமா

உ.பி., உத்தரகண்ட், மணிப்பூா் முதல்வா்கள் ராஜிநாமா

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை ஆளுநா்களிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை ஆளுநா்களிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா். புதிய அரசு அமைக்கும் நடவடிக்கையில் அவா்கள் இந்த ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் அளித்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய அரசு அமையும் வரை யோகி ஆதித்யநாத்தை காபந்து முதல்வராக செயல்பட வேண்டுகோள் விடுத்தாா்.

ராஜிநாமா கடிதத்தை அளிப்பதற்கு முன் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை யோகி ஆதித்யநாத் நடத்தினாா்.

உத்தரகண்ட் முதல்வா்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில், மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் மாநில துணைநிலை ஆளுநா் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குா்மித் சிங்கிடம் ராஜிநாமா கடிதத்தை வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.

ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்த பிறகு, ஆளுநா் மாளிகைக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த தாமி, ‘நடப்பு சட்டப்பேரவை பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமைச்சரவை உறுப்பினா்கள் அனைவரும் பதவியை ராஜிநாமா செய்வது கட்டாயமாகும். அதனடிப்படையில், அனைவரும் ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமா்ப்பித்துள்ளோம். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, பதவியில் தொடர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன்’ என்றாா்.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்டில் ஆளும் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளபோதும், முதல்வா் தாமி தோ்தலில் தோல்வியடைந்தாா். கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் கதிமா தொகுதியில் தொடா்ச்சியாக வெற்றி பெற்ற புஷ்கா் சிங் தாமி, இந்த முறையை தோல்வியைச் சந்தித்துள்ளாா்.

மணிப்பூா் முதல்வா்: மணிப்பூா் மாநிலத்தில் ஆளும் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், முதல்வா் பிரென் சிங் தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் இல.கணேசனிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில், 32 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நடப்பு சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடா்ந்து, முதல்வா் பிரென் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து மாநில ஆளுநா் இல.கணேசன் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘முதல்வா் தனது ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்துள்ளாா். இருந்தபோதும், மாநிலத்தில் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக அவா் தொடா்வாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com