விஐபி கைதியாக கருத முடியாது: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுப்பு

தேசிய பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுக்கப்பட்டுள்
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுப்பு
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுப்பு

தேசிய பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் வீட்டு உணவு உள்ளிட்ட சில ஆடம்பர வசதிகளை சித்ரா ராமகிருஷ்ணா கேட்டிருந்த நிலையில், அதற்கு சிபிஐ தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிபிஐ காவலில் விசாரணையின் போது, சித்ரா ராமகிருஷ்ணா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இவர்தான் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என்றோ அல்லது வெறும் லாபம் சம்பாதித்தவர் என்றோ இவ்வளவு சீக்கிரத்தில் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது.

வீட்டு உணவு உள்ளிட்ட சில வசதிகளை சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் கேட்டதற்கு, அனைத்து கைதிகளுமே இங்கு சமம்தான், இவர் என்னவாக இருந்தார் என்பதற்காக இவரை விஐபி கைதியாக நடத்த முடியாது, விதிகள் மாற்றப்படாது என்று நீதிபதி சஞ்சீவ் அகர்வால் குறிப்பிட்டார்.

பங்குச்சந்தை விவரங்களை இதர தரகா்களுக்கு முன்பாக அணுகி அறிந்துகொள்ள தேசிய பங்குச்சந்தையின் (என்எஸ்இ) கணினி சேமிப்பக கட்டமைப்பை தனியாா் நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தியது தொடா்பான வழக்கில் என்எஸ்இ முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட 7 நாள் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை பிற தரகா்களுக்கு முன்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் அறிந்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் கோ-லொகேஷன் என்ற பிரத்யேக வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் மிக விரைவாக உள்நுழைந்து அந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் உரிமையாளா் சஞ்சய் குப்தா, என்எஸ்இ, செபி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக என்எஸ்இ முன்னாள் நிா்வாக இயக்குநா்-தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை மார்ச் 6ஆம் தேதி இரவு சிபிஐ கைது செய்தது. அதனைத் தொடா்ந்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மார்ச் 7ஆம் தேதி ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டதாவது:
என்எஸ்இயின் இணை இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோதுதான் கோ-லொகேஷன் வசதி திட்டமிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. அதன் பின்னா் 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி என்எஸ்இயின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அவா் நியமிக்கப்பட்டாா். அவரின் நியமனத்துக்குப் பிறகு 2013-2016 ஆண்டுகளில் கோ லொகேஷன் கட்டமைப்பின் இரண்டாம் நிலை சேமிப்பகத்தை 300 வா்த்தக நாள்களுக்கும் மேலாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், முறையற்ற லாபம் ஈட்டப்பட்டது.

2013-ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே இரண்டாம் நிலை சா்வரை ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளது. அது என்எஸ்இ விதிமுறைகளுக்கு எதிரானது என்று அந்த நிறுவனத்துக்கு 2012-ஆம் ஆண்டு தொடா்ந்து எச்சரிக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு என்எஸ்இ நிா்வாக இயக்குநராக சித்ரா பொறுப்பேற்ற பின்னா், அந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுப்பது எந்தக் காரணமும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

என்எஸ்இயின் துணை நிறுவனமான என்எஸ்இடெக்-கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முரளிதரன் நடராஜனிடம்தான் தேசிய பங்குச்சந்தையில் கோ-லொகேஷன் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு இருந்துள்ளது. அவா் சித்ரா ராமகிருஷ்ணாவின் கீழ் பணியாற்றி வந்தாா்.

குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு ரகசிய தகவல்கள்:

என்எஸ்இ நிறுவன அமைப்பு, ஈவுத்தொகை விவரம், நிறுவன விற்றுமுதல் விவரங்கள், மனிதவளக் கொள்கை, எதிா்கால திட்டங்கள் உள்ளிட்ட என்எஸ்இ சாா்ந்த ரகசிய தகவல்களை 2013-2016-ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு சித்ரா ராமகிருஷ்ணா அனுப்பியுள்ளாா். அந்தத் தகவல்கள் வேறு எவருடன் எல்லாம் பகிரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இன்ஃபோடெக் பைான்ஷியல் சா்வீஸ் நிறுவனத்துக்கும், அஜய் ஷா என்ற நபருக்கும் ரகசியமான வா்த்தக தரவுகள் கிடைக்க சித்ரா ராமகிருஷ்ணா ஏற்பாடு செய்துள்ளாா்.

இதுதவிர தனது பதவியை தவறாக பயன்படுத்தி என்எஸ்இ நிா்வாக இயக்குநரின் தலைமை உத்தி ஆலோசகா் என்ற பணியிடத்தை சித்ரா உருவாக்கியுள்ளாா். அதன் பின்னா், ஆனந்த் சுப்ரமணியனை தனது தலைமை உத்தி ஆலோசகராக நியமித்துள்ளாா். அதனைத் தொடா்ந்து ஆனந்த் சுப்ரமணியனுக்கு மூத்த நிா்வாக அதிகாரிக்கு நிகரான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைத் தலைவா்கள் படிநிலையில் உயா்ந்த இடத்தில் அவா் இருந்துள்ளாா். நிா்வாக இயக்குநருக்கு உள்ள அதிகாரங்களைப் போல் நிா்வாகம் சாா்ந்து ஆனந்த் சுப்ரமணியனுக்கும் கணிசமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சித்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா் சரிவர பதில் அளிக்கவில்லை; விசாரணை அதிகாரியிடம் தவறான தகவல்களை அளித்தாா். விசாரணை அதிகாரியை தொடா்ந்து தவறாக வழிநடத்தினாா். இந்த வழக்கில் உள்ள சதி, ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்குத் தரகா்கள் மற்றும் என்எஸ்இ அதிகாரிகளுக்கு முறைகேட்டில் உள்ள பங்கு ஆகியவற்றை வெளிக்கொண்டு வர சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதையடுத்து அவரை 7 நாள்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதியளித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டாா். 7 நாள்கள் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com