ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி

பழைய சோறு சாப்பிடுவதெல்லாம் அந்தக் காலம் என்று சொன்னவர்கள் எல்லாம் தேடித் தேடி பழைய சோறு சாப்பிட வைக்கும் வகையில் வந்திருக்கிறது ஆய்வு முடிவுகள்.
ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி


சென்னை : பழைய சோறு சாப்பிடுவதெல்லாம் அந்தக் காலம் என்று சொன்னவர்கள் எல்லாம் தேடித் தேடி பழைய சோறு சாப்பிட வைக்கும் வகையில் வந்திருக்கிறது ஆய்வு முடிவுகள்.

வயிறுப் பகுதியில் உள்ள குடலுக்கும், செரிமானப் பிரச்னைகளுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பழைய சோறு இருப்பதாக சென்னயில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய சோறு பற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஆயவில், அதில் வயிற்றுக்கு உகந்த ஏராளமான நுண்ணுயிரிகள் (பாக்டீரியா) தாராளமாக நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்னங்க இது.. பழுது எனப்படும் பழைய சோறில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதுதான் ஏற்கனவே தெரிந்தது என்கிறீர்களா. அதனால்தானே நம் முன்னோர்கள் அதை அமுது போல சாப்பிட்டார்கள் என்று சொல்கிறீர்களா? என்ன செய்வது, நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் ஆய்வுக்குள்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறதே இந்த நவீன நாகரீக மக்கள் அதிகம் வாழும் உலகில்.

தமிழக கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்துக்கு சில பழைய சோறு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில், பழைய சோறு என்படும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க வைக்கப்பட்ட உணவில், உயிர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய ஏராளமான நுண்ணுயிரிகள் இருப்பதும், சிவப்பரிசியில் செய்யப்பட்ட பழைய சோறில், வயிறுக்கு நன்மை அளிக்கும் அரிதான பல நுண்ணுயிரிகள் இருப்பதும், கருப்பு கவுனி அரிசியில் (கருப்பு அரிசி) கான்டிடா டிராபிகலிஸ், பசிலஸ் பான்டோசஸ் உள்ளிட்ட மிக மிக அரிதான நுண்ணுயிரிகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உயிர்களுக்கு உதவும் நுண்ணுயிரிகள், உடலுக்கு ஏராளமான விட்டமின்களும், ஃபேட்டி ஆசிட்களை உருவாக்கவும் உதவும். இதன் மூலம், நமது குடல் பகுதி வலுவடையும் என்கிறார் டாக்டர் எஸ். ஜெஸ்வந்த்.

வயிற்றில் எரிச்சல், குடல் பிரச்னை உள்ள நோயாளிகள் தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டு வந்தால், செரிமானப் பிரச்னைகள் சரியாவதுடன், செரிமான மண்டலமே முழுக்க சீரடையும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு நன்மை அளிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும் உணவு மற்றும் அதன் நன்மைகள், அது குணப்படுத்தும் நோய்கள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வில், வெறும் பழைய சோறு என்றில்லாமல், பல்வேறு வகையான அரிசிகளில் தயாரிக்கப்படும் பழைய சோறுகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அதன் நன்மைகளும் கண்டறியப்பட்டு வருகிறது.

சரி பழைய சாதம் செய்வது எப்படி என்று உடனே போய் கூகுளில் தேட வேண்டாம்.

பழைய சோறு எப்படி செய்வது என்று தேடுபவர்களுக்கும், டாக்டர் ஜெஸ்வந்தே குறிப்பையும் தந்துள்ளார்.

கோடைக்காலத்தில் சாதத்தில் தண்ணீர் ஊற்றி 6 - 8 மணி நேரம் ஊறவிட வேண்டும். மற்ற காலங்களில் 8 - 12 மணி நேரம் ஊற விடுவதால் தேவையான அளவுக்கு நுண்ணுயிரிகள் வளர போதுமான நேரம் கிடைக்கும்.
இதில், சமைத்த சாதத்தை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது, அதனை மண் பாத்திரத்தில் வைத்து ஊற வைக்கும் போது கூடுதலாக நன்மை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com