தந்தை-மகனை ஒன்று சேர்த்த பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மான், இன்று பஞ்சாப் முதல்வராக பதவியேற்றிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியின் மூலம் 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தந்தை-மகன் இணைந்துள்ளனர்.
பகத் சிங்கின் கிராமமான கட்கட் காளனில் இன்று பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். முன்னதாக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையும் மகனும் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஃபரித்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த தேவிந்தர் சிங்கின் மகன் ஜஸ்விந்தர் சிங், பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரைத் தேடும் பணியில் குடும்பத்தினர் பல காலம் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
மகனைக் காணாமல் மன வேதனையுடன் இருந்த தேவிந்தர் சிங், பகவந்த் மான் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அப்போது அங்கே இருக்கைகளை சரி செய்து கொண்டிருந்த இளைஞரைப் பார்த்ததும், அவர் தனது மகன்தான் என்பதை அறிந்து கொண்டார். முதல்வர் பதவியேற்பு விழா என்பதால், பணியாளர்கள் அனைவரின் விவரங்களும் அங்கே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை வைத்து அவர் தனது மகன்தான் என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
இது குறித்து காவல்நிலையத்தில் தெரிவித்து, காவல்துறை அதிகாரிகளும், ஜஸ்விந்தர் சிங்கின் முகவரிக்குச் சென்று விசாரித்த போது, அவர்தான் 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தேவிந்தர் சிங்கின் மகன் என்பதை கண்டுபிடித்தனர்.
குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் கட்கட் காளனுக்கு வந்தனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த தங்களது மகனைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
வீட்டில் அனைவர் மீதும் ஏதோ ஒரு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பிறகு பல இடங்களில் வேலை செய்துகொண்டிருந்ததாகவும் ஜஸ்வந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.