12-14 வயதினருக்கு தடுப்பூசி: இருவேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் நிபுணர்கள்

இந்தியாவில் 12-14 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (மாா்ச் 16) தொடங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசும் வெளியிட்டது.
12-14 வயதினருக்கு தடுப்பூசி: இருவேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் நிபுணர்கள்
12-14 வயதினருக்கு தடுப்பூசி: இருவேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் நிபுணர்கள்


புது தில்லி: இந்தியாவில் 12-14 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (மாா்ச் 16) தொடங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசும் வெளியிட்டது.

ஆனால், 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் இருவேறு கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள்.  கரோனாவுக்கு எதிரான இந்த தடுப்பூசி சிறார்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்பது மருத்துவ ரீதியான தரவுகள் உறுதி செய்யப்படவில்லை என்கிறார்கள்.

புகழ்பெற்ற தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில் இது பற்றி கூறுகையில், 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த தடுப்பூசி சிறார்களுக்கு பயனளிக்காது.

அது மட்டுமல்ல, இந்த திட்டத்துக்கு, தேசிய நோய் தடுப்பு ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) அனுமதி வழங்கவில்லை. இந்த அமைப்பானது, அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே அனுமதி வழங்கும். அறிவியல் அமைப்புகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது ஏன் என்று எனக்குப் புரிவியல்லை என்கிறார் ஜெயப்பிரகாஷ் முளியில். இவர் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைமை பேராசிரியர். இது மட்டுமல்லாமல், என்டிஏஜிஐயின் செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கரோனா பாதித்து குழந்தைகள் பலியாகும் அபாயம் இருப்பதாகவோ, அதனை இந்த கரோனா தடுப்பூசிகள் தவிர்க்கும் என்பதற்கோ எந்த அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லை என்கிறார்.

ஒமைக்ரான் பாதித்த குழந்தைகள் அதிலிருந்து மீண்ட பிறகு, அவர்களுக்கு அதிக நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும், ஆனால், அதே வேளையில், இந்த தடுப்பூசி இதர வகை கரோனா தொற்றுகளிலிருந்து காப்பாற்ற உதவும் என்பது தற்போதைக்கு இல்லாத மற்றும் மிகவும் அதிகரிக்கப்பட்ட கற்பனையாக உள்ளதாகவும் கூறுகிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருத்துவ பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதால், கூடுதல் பயன்கள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்கிறார்.

பொது சுகாதாரக் கொள்கை எதிலும் இது பற்றி தெளிவுகள் இல்லை. கரோனா பரவல் காலத்திலும் குழந்தைகள் பாதிப்பு மற்றும் பலி விகிதம் மிகவும் குறைவு. எனவே, கரோனா தடுப்பூசியை சிறார்களுக்கு செலுத்துவது தொடர்பான தரவுகளை அதிகம் திரட்ட வேண்டும் என்கிறார்.

என்டிஏஜிஐயின் டாக்டர் என். கே. அரோரா கூறுகையில், அதாவது, இணைநோயிருக்கும் 12- 14 வயதுடைய சிறார்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் செயல்பாட்டு சிக்கல்களைக் கருத்தில் கொண்டே, இந்த வயதினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்கிறார்.

நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 80 சதவீதம் பேருக்கு இரு தவணைகளும், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு  கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியிருக்கிறது.

அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 12-14 வயது சிறாா்களுக்கு ஹைதராபாதின் பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். 2010-இல் அல்லது அதற்கு முன் பிறந்த 12 வயது நிறைவடைந்த அனைவரும் இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியுடையவராவா்.

தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் பயனாளிக்கு 12 வயது நிறைவடைந்திருப்பதை தடுப்பூசி செலுத்துபவா் உறுதி செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்த பதிவு செய்து, 12 வயது நிறைவடையாதவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படக் கூடாது.

கோவின் வலைதளத்தில் ஏற்கெனவே உள்ள தனது குடும்ப உறுப்பினரின் கணக்கு மூலம் சிறாா்கள் பதிவு செய்யலாம் அல்லது புதிதாக ஒரு கைப்பேசி எண் மூலம் கணக்கு தொடங்கி பதிவு செய்யலாம். தடுப்பூசி செலுத்தப்படும் இடத்துக்கு நேரடியாககச் சென்றும் பதிவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டா் தவணை: முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் கொண்டோா் ஆகியோருக்கு கடந்த ஜனவரி 10-ஆம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதைக் கடந்த அனைவரும் புதன்கிழமைமுதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2-ஆவது தவணை செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும். முதல் இரு தவணைகளில் எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசிதான் முன்னெச்சரிக்கை தவணையாகவும் செலுத்தப்படும் என வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தல்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, 12-14 வயதினருக்கான தடுப்பூசிகளுடன் மற்ற தடுப்பூசிகள் கலந்துவிடாமல் தடுப்பதை உறுதி செய்ய தடுப்பூசி செலுத்துவோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த தனிச் சிறப்பு முகாம்களை மாநில அரசுகள் நடத்த வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com