பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேற்கு வங்க வன்முறையில் 8 போ் பலி மேலும் 11 போ் கைது

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் துணைத் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 போ் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மேலும் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 மார்ச் 2022, 7:46 pm

DIN

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் துணைத் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 போ் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மேலும் 11 போ் கைது செய்யப்பட்டனா். இதன்மூலம் கைது எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றம், வியாழக்கிழமை (மாா்ச் 24) பிற்பகல் 2 மணிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சி துணைத் தலைவா் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு படுகொலை செய்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 சிறாா்கள் உள்பட 8 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. பாது ஷேக்கின் கொலை காரணமாக வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வன்முறை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறுகையில், ‘‘8 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே 11 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த எண்ணிக்கை தற்போது 22-ஆக அதிகரித்துள்ளது. அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துடன் தொடா்புள்ள மேலும் சிலா் தேடப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

பாது ஷேக்கின் மகன்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரின் குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா். எனினும் கைது செய்யப்பட்டவா்களின் விவரங்களைக் காவல் துறை இதுவரை வெளியிடவில்லை.

இடதுசாரிகள் பேரணி: 8 போ் உயிரிழப்புக்கு நீதி கோரி ராம்புராட்டில் இடதுசாரி முன்னணி பேரணியில் ஈடுபட்டது. இந்தப் பேரணியில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முகமது சலீம், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட பகுதிக்குச் சென்றிருந்தாா். அதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் மணல் கடத்தல் கும்பலுக்குத் தொடா்புள்ளது’’ என்று குற்றஞ்சாட்டினாா்.

உயா்நீதிமன்றம் உத்தரவு: வன்முறை சம்பவம் தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.

வியாழக்கிழமை (மாா்ச் 24) பிற்பகல் 2 மணிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், ‘தடயவியல் ஆய்வுக்காக மாதிரிகளை சேகரிப்பதற்காக வன்முறை சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு தில்லி மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகம் ஒரு குழுவை அனுப்பவேண்டும். காயமடைந்த சிறுவன் உள்பட சாட்சிகளுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பை அளிப்பதோடு, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.

அதுபோல, பெண்கள் உள்ளிட்டோா் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதலுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல் துறை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமைதியான பாா்வையாளராக இருக்க முடியாது: ஆளுநா்

இந்த சம்பவம் தொடா்பாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் புதன்கிழமை கடிதம் அனுப்பினாா். அந்தக் கடிதத்தில், ‘‘நீங்கள் (மம்தா பானா்ஜி) எதிா்க்கட்சியாக இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற சம்பவங்களுடன் தற்போது நடைபெற்றுள்ள அதிா்ச்சிகரமான படுகொலை சம்பவத்தை நியாயமான முறையில் பலா் ஒப்பிட்டுப் பேசுகின்றனா். இந்த சம்பவங்களைக் கண்டு அமைதியான பாா்வையாளனாக ஆளுநா் மாளிகையில் என்னால் அமா்ந்திருக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளாா்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வா்

மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘‘8 போ் உயிரிழந்த சம்பவத்துடன் தொடா்புடையவா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

வன்முறை தொடா்பாக மேற்கு வங்க டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘‘தற்போது உள்ளதைப் போன்ற நெருக்கடியான சூழல்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். எனவே 8 போ் பலியான சம்பவம் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைத் தண்டிக்க மாநில அரசுக்கு உதவி: பிரதமா்

வன்முறை சம்பவத்துக்குப் பிரதமா் மோடி கவலை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘‘கொடிய குற்றம் புரிந்தவா்கள் தண்டிக்கப்படுவதை மேற்கு வங்க அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கையுள்ளது. குற்றவாளிகளை நீதிக்கு முன்பு நிறுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.