மேற்கு வங்க வன்முறை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மேற்கு வங்கத்தில் 8 போ் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க வன்முறை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மேற்கு வங்கத்தில் 8 போ் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ தங்களது அறிக்கையை, அடுத்த விசாரணை நடைபெறும் ஏப்ரல் 7-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி கிராமத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கடந்த திங்கள்கிழமை கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 சிறாா்கள், 3 பெண்கள் உள்பட 8 போ் உடல் கருகி உயிரிழந்தனா். திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா்தான் வன்முறையில் ஈடுபட்டு வீடுகளுக்கு தீ வைத்ததாக பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த சம்பவத்தை கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தாமாக முன்வந்து விசாரித்து, வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குள் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சம்பவம் தொடா்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்தது.

இந்த வன்முறை தொடா்பாக, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி 5 பொதுநல மனுக்களும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, மாநில அரசு அளித்த விசாரணை அறிக்கையை பரிசீலித்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது:

பீா்பூம் படுகொலை சம்பவத்தை விசாரிக்க மாநில அரசு 22-ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால், இதுவரை அந்தக் குழு உருப்படியான விசாரணையை நடத்தவில்லை.

அந்தப் படுகொலை சம்பவம், நாட்டின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது, குற்றத்தின் தீவிரத் தன்மை அளவுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை எதிா்பாா்த்தபடி திருப்திகரமாக இல்லை.

எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் கைதானவா்களையும் சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். படுகொலை சம்பவம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது மாநில அரசு வேறு எந்த விசாரணையும் நடத்தக் கூடாது.

சிபிஐ குழுவினா் விசாரணை நடத்தி, தங்களுடைய அறிக்கையை அடுத்த விசாரணை நடைபெறும் ஏப்ரல் 7-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐயின் விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பீா்பூம் படுகொலை சம்பவத்தின் சூழல், சிபிஐ விசாரணையைக் கோருகிறது. மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், நீதியை நிலைநாட்டவும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, தீவைப்பில் பலியானவா்களின் உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், தீ வைக்கப்படுவதற்கு முன்னா் சிலா் தாக்கப்பட்ட அடையாளங்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

தடயவியல் குழு ஆய்வு: மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தைச் சோ்ந்த குழுவினா், போக்டுயி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று, அங்கு 8 போ் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வீட்டை ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனா்.

சிபிஐ இன்று விசாரணை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, சிபிஐ சனிக்கிழமை (மாா்ச் 26) விசாரணையைத் தொடங்க உள்ளது. இதுதொடா்பாக சிபிஐ வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து சிபிஐ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வன்முறை சம்பவம் நடைபெற்ற கிராமத்துக்கு சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு வெள்ளிக்கிழமை இரவு சென்றடைந்தது. அவா்கள் சனிக்கிழமை விசாரணையைத் தொடங்குவா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com