
பயணத்தின்போது தொலைந்துபோன பையை கண்டிபிடிக்க பொறியாளர் ஒருவர் விமானத்தின் இணையதளத்தையே ஹைக் செய்துள்ளார். மற்றொரு பயணியிடம் அவரின் பை தவறுதலாக மாறி சென்றுள்ளது.
இதையடுத்து, மென்பொருள் பொறியாளரான நந்தன் குமார், தொலைந்துபோன பையை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். அதன்படி, இன்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள சக பயணிகளின் விவரங்களை அறிந்து கொண்டு, அவரின் பையை திரும்ப பெற்றுள்ளார்.
இதுகுறித்து நந்தன் குமார் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். இது வைரலான நிலையில், இதற்கு பதிலளித்த இன்டிகோ நிறுவனம், ரகசியமான தரவுகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம், நந்தன் குமார் இணையதளத்தை ஹேக் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாட்னாவிலிருந்து பெங்களூருவுக்கு இன்டிகோ விமானம் மூலம் நந்தன் குமார் பயணம் செய்துள்ளார். அப்போது, பெங்களூரு விமான நிலையித்தில், மற்றொரு பயணியிடம் இவரது பை மாறி சென்றுள்ளது. இதை ட்விட்டரில் விவரித்த நந்தன் குமார், "இரண்டு சரப்பிலும் தவறு நடைபெற்றுள்ளது. சிறிய சிறிய வேறுபாடுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இரண்டு பைகளும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது.
வீட்டிற்கு சென்ற பிறகுதான், பை மாறி போனது தெரியவந்துள்ளது. பின்னர், நீண்ட நேர காத்திருப்புக்கு மத்தியில் இன்டிகோ வாடிக்கையாளர் சேவை மையத்தை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பை மாறி சென்ற அந்த பயணியிடம் என்னை பேச வைக்க அவர்களும் முயற்சி செய்தனர்.
ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. பெரிய கதையை சுருக்கி சொல்ல வேண்டுமானால் பிரச்னைக்கு தீர்வு காணப்படவே இல்லை. தரவு பாதுகாப்பு, தனியுரிமையை காரணம் காட்டி அந்த பயணியின் விவரங்களை தர மறுத்துவிட்டனர்.
மீண்டும், தொடர்பு கொள்வோம் என இன்டிகோ வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் உறுதி அளித்தபோதிலும், அவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ளவே இல்லை. ஒரு நாள் முழுவதும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவே இல்லை. பின்னர் தான் பிரச்னையை தீர்க்க நானே களமிறங்கினேன்.
சக பயணியின் பையில் இருந்த பிஎன்ஆர் விவரங்கள் மூலம் இன்டிகோ இணையதளத்தை ஆராய ஆரம்பித்தேன். வருகை பதிவை பதிவு செய்தல், முன் பதிவை திருத்துதல், விவரங்களை புதுப்பித்தல் என பல முறைகளை கையாண்டேன். இருப்பினும், அவரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, இணையதளத்தை உருவாக்குபவரின் கட்டுப்பாட்டு தளத்திற்கு சென்று பயணிகளின் வருகை பதிவை ஆராய்ந்தேன். கடைசியாக, பையை எடுத்து சென்ற பயணியின் இ மெயில் மற்றும் தொடர்பு எண்கள் கிடைத்தது. பின்னர், அவரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பையை மாற்றி கொண்டோம்" என்றார்.
பின்னர், வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தும் வகையில் இன்டிகோ நிறுவனத்திற்கு சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.