எரியும் இலங்கை: ஆக்கிரமிக்கப்படும் இந்திய பெருங்கடல்; நேரடி ரிப்போர்ட்- 8

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: ஆக்கிரமிக்கப்படும் இந்திய பெருங்கடல்; நேரடி ரிப்போர்ட்- 8

இந்திய பெருங்கடலின் பெரும்பகுதியை சீனா மற்றும் நார்வே தூண்டுதலால் சிங்கள அரசு கைப்பற்றத் துடிக்கிறது. இதுகுறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஐ.நா.வில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும் பகுதியைத் தன் நிலத்திற்கு சொந்தமென உரிமை கோரி மனு அளித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது ஏறத்தாழ 200 மைல்களாக உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா-வில் முறையிட்டுள்ளது. இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்துகொண்டிருக்கிறது.

இப்படியான சிக்கலில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நேரடியாக கேரளம், தமிழகம், குறிப்பாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம், நாகை வரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும்.

இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்னை. இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா. அமர்விற்கு தள்ளிப்போட்டுள்ளது. இதே மாதிரியான மனுவை இந்திய அரசும் ஒருமுறை ஐ.நா.வில் கொடுத்ததாகத் தகவல்கள் உள்ளன. சிங்களம் கைப்பற்றத் துடிப்பது குமரிக் கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர்பரப்பை.

ஏற்கெனவே, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போது இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் துணையுடன் இந்திய பெருங்கடலில் தனது ஆளுகையை ஏறத்தாழ 350 மைல்களுக்கு விரிவாக்க வேண்டி முறையிட்டுள்ளது.

வழக்கமாக சர்வதேச கடல் பகுதியில் ஒரு நாட்டின் ஆளுகையானது 200 மைல் தொலைவுக்குதான் இயங்க முடியும். இது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இந்த நிலை எதற்கு என்றால் இந்திய பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தவே சீனா இலங்கையைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறது.

அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கத்தில் சீசல்ஸின் டீகோ கார்சியா தீவுப் பகுதியில் பிரிட்டன் மூலமாகக்  குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது.

பிரான்ஸும் ரஷ்யாவும் இந்தக் கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பெயருக்குதான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும் சீனாவும் வியாபாரத்திற்காகவும் (Silk Road) தனது போர்க்கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்த மட்டுமல்லாமல் கடற்படைப் பயிற்சிகளும் நடப்பதாக செய்திகள் வருகின்றன.

கச்சத்தீவு வரை சீனாவின் தேசியக் கொடிகள் பறந்தன. தற்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான- இணக்கமான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. மாலத்தீவு மட்டும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சூழலுக்கேற்றவாறு நடந்துகொள்கிறது.

அமெரிக்காவைப் பொருத்தவரை தன் மீதான சர்வதேச நாடுகள் சார்ந்திருக்கச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறது. இத்தகையதொரு தன்மையினை அடைந்துகொள்ள அமெரிக்கா கடைப்பிடிக்கும் உபாயங்கள் மூன்றாம் உலக யுத்தத்திற்குகூட வழிவகுக்கலாம். ஆனால் இது சீனாவின் இராஜதந்திர ரீதியிலான செயற்பாட்டினைப் பொருத்தே அமையும்.

உலக, பிராந்திய நலன், அதிகாரங்கள் போன்றவற்றைக் கைப்பற்ற அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நடத்தும் அதிகார போராட்டத்தில் இந்து சமுத்திர பிராந்தியமும், இலங்கையும் முதன்மையான இடத்தினைப் பெற்றுள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியம் இன்று அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகியுள்ளது. வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தில் இருந்தே இன்றைய இதன் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பெரும் பேரரசாகத் தோற்றம் பெற்ற சோழப் பேரரசு கிழக்கு ஆசிய நாடுகளில் தமது செல்வாக்கினைப் பெருக்கவும் பின்னர், அரேபியர்களின் கவனத்தை ஈர்த்த இப்பிராந்தியம் அராபியர்களின் சமய, கலை, கலாச்சாரங்களை இப்பிராந்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது.

16 ஆம் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம் பெற தொடங்கியதுடன், அவர்கள் உலகில் அரசியல் பொருளாதார ரீதியில் மேன்மையடைய வழி ஏற்பட்டுள்ளதுடன் சமயத்தை பரப்பச் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பிராந்திய நாடுகள் இராண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து காலனித்துவ ஆதிக்கத்தைத் தோற்கடித்தன. இதனால் மேலைதேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்களைத் தமதாக்கிக்கொள்ள புது வடிவங்களை நிலைநிறுத்த முற்பட்டனர்.

இத்தகையதொரு நிலையில் இந்து மகா சமுத்திர நாடுகளின் நிலை இவ்வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒருவகையில் சிக்கி தமது சுய ஆதிக்கம் மற்றும் அமைதியை இழந்து வாழவேண்டிய துர்பாக்கியம் உள்ளதாய் இருக்கிறது.

இந்திய பெருங்கடல் ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 28,350,000 சதுர மைல் பரப்பு கொண்டதாகும்.  உலகிலுள்ள பெரிய சமுத்திரங்களில் மூன்றாவது சமுத்திரமாகவும் உலக நீர்ப்பரப்பில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மேலும், தென்முனையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளடங்கலாக 10,000 கிலோ மீட்டர் அகலத்தைக் கொண்டது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை ஐந்து புவிசார் அரசியல் பிரதேசங்களாக பிரிக்கலாம். கிழக்கு ஆப்பிரிக்கா பிராந்தியம், தென் மேற்காசியா பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், ஆஸ்திரேலிய பிராந்தியம் என ஐந்து பிராந்தியங்களாகக் கொள்ளலாம். இது தென்கிழக்காசியாவையும், மத்திய கிழக்கையும் அதாவது மலாக்கா நீரினையும், அரபிக்கடலையும் இணைக்கும் சமுத்திரமாகவும் விளங்குகிறது.

மேலும், அரபிக்கடல், வங்களாவிரிகுடா, ஓமன் வளைகுடா, ஆஸ்திரேலிய குடா, ஏடன் வளைகுடா, பசிபிக்கடல், மொசாம்பிக் கால்வாய், மலாக்கா நீரிணை,சபுக் கடல், தீமோர் கடல் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற கடற்பிராந்தியமாகும்.

குறிப்பாக, இந்திய பெருங்கடலைச் சார்ந்து 47 நாடுகள் உள்ளன. இதில் 36 நாடுகள் கரையோர நாடுகளாகவும், 11 நாடுகள் பின்னணி நாடுகளாகவும் காணப்படுவதுடன்  கொக்கோ தீவுகள், இலங்கை, அந்தமான் தீவுகள், மாலத்தீவுகள், டிகோ கார்சியா, மொரிஷியஸ், பிச்ரல்ஸ் போன்ற பல தீவுகளும் அமைந்துள்ளன.

அதே நேரம் கப்பல் போக்குவரத்துக்கான பல துறைமுகங்கள் காணப்படுகின்றன. சிற்றாங் கொஸ், திருகோணமலை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, தூத்துக்குடி, சென்னை, நாகை, விசாகப்பட்டினம், கொச்சி, கர்வோர், நர்மாறா வோடர், தீலுகிஸ் துறைமுகம், விக்டோரியா துறைமுகம், பூயூகென் என பல துறைமுகங்கள் இந்திய பெருங்கடலைச் சேர்ந்த பிராந்திய நாடுகளில் உள்ளன.

பெருமளவான சக்தி மூல வளங்களான பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் மிக முக்கியமானவை. இவை தவிர பல தாது பொருட்களான தகரம், செம்பு, ஈயம், மற்றும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பருத்தி, ஆடைகள் போன்ற பெறுமதி மிக்க தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளதுடன் இன்று உலகில் முக்கிய சர்ச்சைக்குரிய ஓர் மூலவளமான யுரேனியம் இப்பராந்தியத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படுகின்றது. மேலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர்த்து மற்ற பிராந்திய நாடுகளில் பரவலாக விவசாயப் மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.

மேலும் 40 எண்ணெய் உற்பத்திகள், பெர்சியன் வளைகுடாவிலிருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் இந்திய பெருங்கடல் வழியாக ஏனைய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மலாக்கா நீரிணை உலகத்தில் இரண்டாவது கடல்வழிப் பாதையாகும். ஜப்பானுக்கான எண்ணெய் விநியோகத்தில் 80 சதவீதம், சீனாவுக்கான எண்ணெய் விநியோகத்தில் 60 சதவீதமும் மலாக்கா நீரிணை வழியாக இடம்பெறுகின்றன.

70 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மசகு எண்ணெய் ஒவ்வொரு வருடமும் இந்த நீரினை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. உலக நாடுகளுக்கு கப்பல்களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களில் ஏறக்குறைய அரைப்பங்கு இவ்வழியாகவே ஏற்றி இறக்கப்படுகின்றன. அதோடு இப்பிராந்தியம் பெரும் சந்தை வாய்ப்பினைக் கொண்டதாகும்.

மேற்கூறப்பட்ட தன்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது  இன்றைய நவீன உலகில் இந்தியப் பெருங்கடல் என்றும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகிறது. இதன் காரணமாகவே, 'யார் இந்திய பெருங்கடலைக் கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவை க்கட்டுப்படுத்துவார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் இதுவே ஏழு கடல்களின் திறவுகோலாக விளங்கும். உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சமுத்திரமாக விளங்கும்” எனக் கூறுகிறார்கள்.

மேலும், இந்திய பெருங்கடல் பொருளாதார ரீதியிலும் தொடர்பாடல் மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஏற்படுத்துகிறது.

இத்தகைய நிலைமையில் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஆராய்வதன் வழியாக உலக அமைதி, உலக சமாதானம், உலக பாதுகாப்பு, உலக பொருளாதார போட்டி ஆகிய அம்சங்களை நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி, நாடுகளில் முன்னெடுத்து செல்லப்படும் என்பதை எதிர்வுகொள்ளக் கூடியதாகவுள்ளது.

இந்தியபெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்லாதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அமைதி மண்டலமாக இருந்த இந்தக் கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர் நடந்தது. அவர் காலத்திற்குப் பின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்திய பெருங்கடலில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் தற்போதுள்ள சூழலில் ஏற்படுகிறது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம்.

எனவே, இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்தியாவின் இறையாண்மை காக்க அயல்நாட்டினுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.

ஜவாகர்லால் நேரு, தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்னை ஏற்படும் என்று எண்ணினார்.

ஆனால், இன்றைய நிலைமைகள் மாறி  இந்தியாவிற்கு கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் கண்ணில்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும் அவசியமான பணியாகும். டீகோ கார்சியா தீவில் பிரிட்டன், அமெரிக்காவும் ராணுவ தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியா, சோவியத் நாட்டின் ஆதரவுடன் கடுமையாக எதிர்த்ததால் இராணுவ தளங்கள் அமைக்க முடியவில்லை.

அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோகார்சியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீசியஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

அந்தத் தீவுக்கு மொரீசியஸ் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக் காலம், சமீபத்தில் காலாவதியானது. எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீசியஸ் அரசு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரபிக்கடலிலும் வங்கக் கடலிலும் பாதுகாப்பற்ற, மோசமான புவியரசியல் நிலை ஏற்படும்.

இந்தியப் பெருங்கடல் பிரச்னையில் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுக சிக்கலையும் நாம் கவனித்தாக வேண்டும். 18 ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற நெப்போலியன் ‘இலங்கைத் தீவின் திருகோணமலையைக் கைப்பற்றிவிட்டால் இந்த உலகை நான் ஆள்வேன்' எனக் குறிப்பிட்டமை திருகோணமலையின் உலகளாவிய முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

திருகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவற்றுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா போன்ற நாடுகள் திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெறத் துடிக்கின்றன. ஏற்கெனவே அமெரிக்கா 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவும் (voice of america), எண்ணெய் கிடங்குகளும் அமைக்க, இந்த துறைமுகத்தை கைப்பற்ற கழுகுப் பார்வையில் இருந்தது. ஜப்பானும் இந்த துறைமுகத்தின் மேல் ஒரு கண் வைத்திருந்தது. இதற்கான நிலஅமைப்பைத் கொண்ட திருகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும்.

இந்திரா காந்தி காலத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தையும் நில அமைப்பு ரீதியாக இந்தியா கவனித்து வருகிறது. இந்த துறைமுகமோ இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும்.

இதோடு இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுக விவகாரத்தையும் இந்தியா கவனிக்க வேண்டிய கடமைகள் உள்ளது.

தென் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுக பங்குகள் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை இறுதி யுத்தத்திற்கு பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமான வேலைகளில் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது.

ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமான பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளைக் குத்தகை அடிப்படையில் 99 வருடங்களுக்கு இலங்கை அரசு அளிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஹம்பன்தோட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (8000 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது.ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுக பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டுக் கடற்படைக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல மேலை நாட்டுப் போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்திய பெருங்கடலில் இருப்பதாக செய்தி வருகிறது.

எச்எஸ்பிசி வேர்ல்ட் ஆஃப் ஃபோர்காஸ்ட் (“HSBC World in Forecast 2050”) நடத்திய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017 இல் வெளியான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Water House Coopers ) அறிக்கையில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்திய பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

உலகமயமாக்கல் என்ற நிலையில் எதிர்காலத்தில் இந்திய பெருங்கடல் பல்வேறு நாடுகளின் கேந்திரப் பகுதியாகும்பட்சத்தில் பெரும் அபாயங்கள் நேரலாம். அமெரிக்காவும், இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தை மாற்றி இந்திய பெருங்கடலை அதோடு 2018 இல் இணைத்து இந்தியாவைத் தன் வலைக்குள் போட்டுக்கொண்டது.

இந்தியப் பெருங்கடலில் 13 முக்கிய கேந்திரத் துறைமுகங்கள் உள்ளன. கடல்சார் வணிகப் போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளுக்கு உலக நாடுகளிடையே இந்தக் கடலில் போட்டிகள் உள்ளன. தற்போதைய நிலையில் இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது.

நமக்கு நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை என யாருடனும் சுமுகமான நட்புறவு இருப்பதாகக் கூற முடியாது. இத்தகைய நிலையில் மாலத்தீவில் மட்டும் சுமுகமான உறவுள்ளது. இந்திய பிரதமர் மோடி மாலத்தீவு வளர்ச்சிக்கு வழங்கிய கடனும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் என்ன செய்ய?

உலகின் முதலாவது கடலாதிக்கப் பேரரசு சோழப் பேரரசாகும். 10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து- பசிபிக் சமுத்திரப் பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அரபி கடலிலும் சோழர்களின் கடற்படையும் சோழர் கணங்களும் (வர்த்தக கம்பெனிகள்) ஏகசெல்வாக்கு செலுத்தின.

சோழர்கள்தான் முதன்முதலில் கடல் கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் என்ற அரசை ஸ்தாபித்தார்கள். இதன் மூலம் கடல்கடந்து பேரரசுகளை உருவாக்கலாம் என்பதை உலகிற்கு முதலாவதாக செய்துகாட்டியவர்கள் சோழர்கள்.

உலகின் முதலாவது கடற்படையும் சோழர்களதே. சோழர்களின் கடல்வீரர்களைச் சுமந்துகொண்டு தொடராக இந்தோ –பசிபிக் கடலில் உலாவந்த கடற்கலங்களுக்கு நாவாய் என அன்று அழைத்தனர். இன்றைய கடற்படை என்ற சொல் நாவாய் என்ற வேர்ச்சொல்லில் இருந்தே தோன்றியது. சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்ததுக் கைக்கொண்ட கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா "இந்தோ-பசிபிக் கோட்பாடு" என தமது நலன் சார்ந்து மீண்டும் புதுவடிவம் கொடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு, மேற்கு கடற்கரை முழுவதும் சோழர் கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தன. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத் தீவின் தமிழர் பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியூகத்தில் இணைவது புரியும்.

சோழர்களின் கடல் ஆதிக்கம் வீழ்ச்சி அடைகின்றபோது 13ம் நூற்றாண்டுக்குப் பின்னர் 14ம்,15ம் ஆம் நூற்றாண்டு வரை அராபியர்களின் கைகளில் இந்து சமுத்திர ஆதிக்கம் சென்றது. அவர்கள் வங்கக் கடலை கடந்து தென்கிழக்காசிய வரை வர்த்தகம் செய்து ஆதிக்கம் செலுத்தியதோடு மாத்திரமல்ல, தென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகளையும் கட்டமைப்புச் செய்துவிட்டார்கள்.

சோழர்களாகிய தென்னிந்தியர்களின் கடல் வலிமை குன்றியபோது இத்தகைய பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

15 ஆம் நுாற்றாண்டில் சீனர்கள் இந்திய பெருங்கடலில் பெரும் கடற்படையுடன் இலங்கைத் தீவிற்கு கி.பி 1407-1419களில் நான்கு முறை சீன கடற்படைத்தளபதி அட்மிரல் ஷென் -ஹி (Admiral Zheng-he) 440 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட 62 கப்பல்களில் 37000 சீன வீரர்களுடன் வந்தார்.

இலங்கைத்தீவில் முதலாவது துப்பாக்கி பிரயோகத்தை செய்தவர் ஷென் -ஹிதான். கொழும்பு கோட்டை ராஜ்யத்தைக் கைப்பற்றி (1409-1411) மூன்று ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துவிட்டுச் சென்றுவிட்டார்.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகேயரும், ஒல்லாந்தரும், தொடர்ந்து ஆங்கிலேயரும் இந்திய பெருங்கடலில் நுழைந்து இப்பிராந்திய நாடுகளை தமது காலனிய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டுவந்தனர்.

வல்லரசாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் நாம், நம் நாட்டின் தெற்கெல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?

                                                                                                                                  (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com