எரியும் இலங்கை: மகிந்த ராஜபட்ச அரசின் வீழ்ச்சி; நேரடி ரிப்போர்ட்-3

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: மகிந்த ராஜபட்ச அரசின் வீழ்ச்சி; நேரடி ரிப்போர்ட்-3

இலங்கை கடந்த 1977 ஆம் ஆண்டுக்குப் பின், என்றுமில்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. போதுமான அளவு அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் ‘நெருக்கடி நிலை’ தீவிரமடைந்துள்ளது.

மறுபுறத்தில் டாலருக்கான ரூபாயின் பெறுமதிப்பு வீழ்ச்சியடைவதால், பொருள்கள் விலையும் சேவைகளின் கட்டணங்களும் உச்சம் தொட்டுள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ‘அரசாங்கத்திற்கு எதிரான அலை’ உருவாகியுள்ளது. நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் சமூக வலைத் தளங்கள் வழியாக மக்கள் வெளியிட்டுவரும் எதிர்ப்புக் குரல்கள் மூலம் இது உறுதியாகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போரை நிறைவுக்குக் கொண்டு வருவதற்கு நிர்வாக நிலையில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார் என சிங்கள மக்களால் போற்றிப் புகழப்பட்ட கோத்தபய ராஜபட்சவுக்கு 2019 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போது அமோக ஆதரவு கிட்டியது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே அவர் அரியணை ஏறினார். மாற்றம் வருமென மக்களும் பெரிதும் நம்பினர். அந்த நம்பிக்கை தற்போது தவிடுபொடியாகியுள்ளது என்பதை ஆளுங்கட்சியினருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்கள் உணர்ந்துள்ளனர். அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ள புலனாய்வு அறிக்கைகளிலும், மக்கள் எதிர்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பட்டியலிடப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபட்ச பதவிக்கு வந்த சிறிது காலத்திலேயே உலகளவில் கரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர் முடக்கம், பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களால் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த பொருளாதாரமானது, மேற்படி தாக்கங்களாலும் ‘நெருக்கடி’ப் பொறிக்குள் நன்றாகவே சிக்கி இறுகியது. இந்த நிலையில் அந்த பொறிக்குள் இருந்து மீள்வதற்கும் விடுபடுவதற்கும் தப்பிப்பதற்கும் தேவையான மீட்பு நடவடிக்கைகளைக் கையாளாமல், ஏனோதானோ போக்கிலும் பொறுப்பற்ற விதத்திலும் அரசு செயற்பட்டதால் தற்போது நிலைமை மோசமாக உள்ளது.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சில முக்கிய துறைகளில் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் வருவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நிதி நிறுவனங்களும் தமது பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து கீழ் நிலையில் வைத்துள்ளன. இதனால் கடன்களைப் பெறுவதிலும் ஆயிரம் சிக்கல்கள்.

பொருளாதார நெருக்கடி

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. 1948 முதல் 1969 வரை எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படவில்லை. எனினும், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த 1970 இல் சிறிமாவோ பண்டாரநாயக, மூடிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றியதால் பல நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. பஞ்சம்கூட ஏற்பட்டது. உணவுத் தட்டுப்பாட்டால் ‘வரிசை யுகம்’ ஆரம்பமானது. 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் பொருளாதாரம் எழுச்சி பெற ஆரம்பித்தது.

எனினும், தமிழர்கள் - இலங்கை அரசுப் படையினர் இடையிலான உள்நாட்டுப் போர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக, தலையிடியாக அமைந்தது. 80-களில் ஏற்பட்ட பின்னடைவானது, இன்றும் ‘மீண்டெழ’ முடியாத நிலையிலேயே இலங்கையை வைத்துள்ளது. 2005 - 2015 காலப்பகுதியில் மகிந்த ராஜபட்ச ஆட்சியில் பெறப்பட்ட அதிக வட்டிக்கான கடன்கள், தேவையற்ற பெரிய அபிவிருத்திகள் என்பவற்றால் பொருளாதார வளர்ச்சி என்பது திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. கடன்கள் பெற்றே ஆட்சி முன்னெடுக்கப்பட்டது.

இப்படியான நடவடிக்கையாலேயே நாடு இந்நிலைமையில் உள்ளது என முன்னாள் குடியரசுத் தலைவர்களில் ஒருவரான சந்திரிகாகூட அண்மையில் சுட்டிக்காட்டினார்.

2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சியின் கீழ் பொருளாதாரத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும், விலைவாசி உயர்வு என்பது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் பொருளாதாரப் பிரச்னைகள் உரிய வகையில் தீரவில்லை. இதற்கிடையில் கரோனா பெருந்தொற்றும் வந்து, உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தாக்கங்களும் இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தது. அது உடனடியாக வெளியில் தெரியவில்லை. தற்போதுதான் தனது கோரமுகத்தை காட்டி வருகின்றது எனலாம். அதுமட்டுமல்ல ரஷியா, உக்ரைன் போரும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையில் அந்நியச் செலாவணி கையிருப்பும் போதுமான அளவு இல்லை. இதனால் டாலர்களை விநியோகிக்க முடியாத நிலை. இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு, அதன் பின்னர் விலையேற்றம் என நெருக்கடி நீள்கிறது. டாலரின் பெறுமதிப்பு அதிகரித்துள்ளதால் கடந்த ஓரிரு நாள்களில் மாத்திரம் அத்தியாவசியப் பொருள்கள் உட்பட பல பொருள்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. ஆசியாவிலேயே இலங்கையில்தான் தற்போது அதிகளவு பணவீக்கம் காணப்படுகிறது.

அதேபோல, வரிசைகளும் முடிவுக்கு வந்த பாடில்லை. கட்டுப்பாட்டு விலைகளை இலங்கை தளர்த்தியுள்ளதால், தமிழ், சிங்கள புத்தாண்டுகாலப் பகுதியில் பொருள்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் வெள்ளிடைமலையாகத் தென்படுகின்றன.

எரிபொருள், மருந்து வகைகள் உள்பட அத்தியாவசியப் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு ‘டாலர் கடன்’ பெறுவதற்குப் பல நாடுகளை இலங்கை நாடியது. ஆனால் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. கடனுக்கு எண்ணெய் வழங்க மத்திய கிழக்கு நாடுகள்கூட பச்சைக்கொடி காட்டவில்லை. சீனாவிடம் இருந்தும் திருப்திகரமான பதில் இல்லை.

இறுதியில் இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.3,750 கோடி) இலங்கை கடனாகக் கோரியது. இந்தியா அத்தொகையுடன் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.7,500 கோடி) கடனுதவி வழங்கியது. 

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்துடனும் இலங்கை பேச்சுகளை நடத்தி வருகிறது. தற்காலிகத் தீர்வுகளை இலங்கை அரசு, தேடுகிறதே ஒழிய, நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி பயணிப்பதற்கான உறுதியான திட்டங்கள் அரசிடம் இல்லை என்றே கூற வேண்டும்.

மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து, பொருளாதாரம் சம்பந்தமாக பேச்சு நடத்திய எதிரணி எம்.பிக்களும் இந்த தகவலை சமூகமயப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் இல்லாததால் அமலாகும் மின்வெட்டு, அதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகள் என பொருளாதாரப் பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

உலக சந்தை, பூகோள நிலை ஆகியவற்றைக் காரணம் காட்டி விலை உயர்வை நியாயப்படுத்த முடியுமென்றால் நாட்டில் அரசு எதற்கு என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பொருளாதார பாதுகாப்பும் முக்கியம் பெறுகிறது. அப்படியானால் அந்நியச் செலாவணி கையிருப்பு, குறிப்பிட்ட சில காலத்துக்குத் தேவையான போதுமானளவு உணவு, மருந்து வகைகள், எரிபொருள் என்பன களஞ்சியங்களில் கைவசம் இருக்க வேண்டும். இதனை முகாமப்படுத்த, நிர்வகிக்க அதிகாரிகளும் உள்ளனர். அப்படி இருந்தும் அதனைச் செய்யாமல் தற்போது தடுமாறுவதை என்னவென்று சொல்வது?

உரப் பிரச்சினையும் உணவுத் தட்டுப்பாடும்

ரசாயன உரத்துக்குத் தடை விதித்து, இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கும் திட்டம் நல்லதுதான். ஆனால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு நெறிமுறை வேண்டும். ஒரே இரவில் செய்துவிட முடியாது. நீண்டகால திட்டங்கள் வகுத்தே இலக்கை நோக்கி நகர வேண்டும். ஆனால் ஒரே இரவில் ரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நெல் உள்பட அனைத்து விவசாய உற்பத்திகளும் பாதிக்கப்பட்டன. பிறகு அரசு முடிவை மாற்றினாலும் பாதிப்பு குறையவில்லை. இதனால் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகின்றது. இறக்குமதிக்கான டாலர்கள் இன்மையால் இந்நிலைமையை அரசு எப்படி சமாளிக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ரசாயன உரத்துக்குப் பதிலாக சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதனப் பசளை தரமற்றது என ஆய்வில் தெரிய வந்தது. உரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள, பொறுப்பேற்க சீன நிறுவனம் மறுத்தது. இறுதியில் சீன நிறுவனத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசியல் நெருக்கடி

2020 ஆகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் இடங்கள் உட்பட 145 இடங்கள் கிடைத்தன.

பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்கிய டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈபிடிபி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரத்தன தேரர் போட்டியிட்ட எமது மக்கள் சக்தி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன, தேர்தலின் பின்னர் மொட்டு அரசுடன் ஒட்டிக்கொண்டன.

சில மாவட்டங்களில் மட்டும் தனித்து போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே ஒரு இடம் கிடைத்தது. இதன்படி 151 இடத்தில் (அதாவது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்)  மொட்டு கட்சி அரியணையேறியது.

இதற்கு மேல் அதிகமாக புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் தேசிய கூட்டணியும் (ஒரு இடம்) அரசுக்கு நேசக்கரம் நீட்டிவருகிறது. அதேபோல, எதிரணி எனக் கூறிக் கொண்டாலும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் வாக்கெடுப்புகளின்போது அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. (கட்சித் தலைவர்களைத் தவிர) டயானா, அரவிந்தகுமார் ஆகியோரும் அரசு பக்கம் உள்ளனர்.

அந்த வகையில் நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக 160 பேர் செயற்பட்டுவந்தனர்.

ஆதரவுப் பட்டியல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 145

ஈபிடிபி - 02

தேசிய காங்கிரஸ் - 01

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01

எமது மக்கள் சக்தி - 01

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 01

முஸ்லிம் தேசியக் கூட்டணி - 01

முஸ்லிம் காங்கிரஸ் - 04

மக்கள் காங்கிரஸ் - 02

அரவிந்தகுமார் - 01

டயானா - 01

எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதென்பது அரசுக்கு சவாலுக்குரிய விஷயமாக இருக்கவில்லை. எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் அரசின் மூன்றிலிரண்டு பலத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்விருவரும் இல்லாமல் தனக்கு அரசுடன் ‘டீல்’ இல்லை என்பதை வாசுதேவ நாணயகாரவும் அறிவித்துவிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, தேசிய காங்கிரஸ், ‘யுதுகம’ கட்சி ஆகியவற்றின் எம்.பிக்களும் விமல், கம்மன்பில தரப்புடன்தான் நிற்கின்றன.

அந்தவகையில் தற்போது அரசுக்கு எதிராக 28 பேர் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

அந்த பட்டியல்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 14 (நா.உ)

தேசிய சுதந்திர முன்னணி - 06

ஜனநாயக இடதுசாரி முன்னணி - 02

பிவிதுரு ஹெல உறுமய - 01

கம்யூனிஸ் கட்சி - 01

லங்கா சமசமாஜக்கட்சி - 01 (தேசியப்பட்டியல்)

தேசிய காங்கிரஸ் -01

‘யுதுகம’ - 01

எமது மக்கள் சக்தி - 01

ஆக அரசின் 153 (எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள் இன்றி) என்ற எண்ணிக்கையில் இருந்து 28 பேரை ஒதுக்கிவிட்டால், தற்போது அரசு பக்கம் 125 பேர்தான் நிற்கின்றனர். சிலவேளை, அரசு முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவை பெற்றால்கூட அந்த எண்ணிக்கை 132 ஆக உயரக்கூடும். அப்படியானால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைக்க அரசுக்கு இன்னும் 18 இடங்கள் தேவை. சிலவேளை சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரை வளைத்துப்போட்டால்கூட 150 உடன் சாத்தியப்படாது. எனவே, எதிரணியை உடைக்க வேண்டும். அதற்கான நகர்வு தற்போது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. 

எதிரணியில் உள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவு வழங்காத நிலையில், அரசில் இருந்து இன்னும் 13 பேர் விலகிவிட்டால் அரசு சாதாரண பெரும்பான்மையையும் இழந்துவிடும் அபாயம் உள்ளது. விஜயதாச ராஜபட்ச ஏற்கெனவே அரச எதிர்ப்பு பக்கத்தில்தான் உள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவும் அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். சந்திர வீரக்கொடியும் அதிருப்தியில் உள்ளார். எனவே, அரசின் சாதாரணப் பெரும்பான்மையைத் தகர்க்க எதிரணிக்கு இன்னும் 10 இடங்களே தேவை, விதுர விக்ரமநாயக்க மற்றும் தொலவத்த ஆகியோரும் அதிருப்தியிலேயே உள்ளனர். அந்தவகையில் 8 பேர் வெளியேறினால், அரசு சாதாரண பெரும்பான்மையைக்கூட இழந்துவிடும்.

சில நேரம், எதிரணிகள் விசேஷ வியூகமொன்றை அமைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசுக்கு எதிராகக் கொண்டுவந்தால் அரசு கவிழும். எதிரணிகள் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் குறைவு.

அதேவேளை, சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சரவையில் நீடிக்கின்றனர். விமல் தரப்பில் ஒருவரும் இராஜாங்க அமைச்சு பதவியை வகிக்கின்றார். இவர்கள் எல்லாம் அரசில் இருந்து வெளியேறினால் மட்டுமே அரசியல் நெருக்கடி தலைதூக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை விஷயத்தில் மட்டுமே சிக்கல் ஏற்படும்.

ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் அரசியல் குழப்பம், இவற்றுக்கு மத்தியில்தான் கடந்த மார்ச் 15 ஆம் தேதி சர்வகட்சி மாநாட்டை குடியரசுத் தலைவர் கூட்டினார்.

அதேநேரம், தற்போதைய சூழ்நிலையில் ஜி.எல்.பி. பிளஸ் சலுகை இல்லாமல்போனால் அது இலங்கைக்கு மரண அடியாகவே அமையும். எனவே, பொறுப்புக் கூறல் உள்ளிட்ட விஷயங்களில் முன்னேற்றம் காட்டவே முற்படும். இதற்காகவே காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி 25 விசாரணைக் குழுக்கள் என்றெல்லாம் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் வளங்கள் இருந்தும், பொருளாதாரம் முன்னேறாமல் இருப்பதற்கு இனப்பிரச்னையும் ஒரு காரணம். எனவே, அப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணாமல் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்பது நிதர்சனம். புலம்பெயர் தமிழர்களில் பண பலம் படைத்தவர்கள் உள்ளனர். அப்படியானவர்கள் இங்கு வந்து முதலிடுவதற்கு சில சட்டங்கள் தடையாக உள்ளன. அப்படியான சட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய கோணத்தில் அரசு சிந்தித்தால் மட்டுமே விடிவு சாத்தியம். இல்லையேல் இலங்கையைச் சூழ்ந்த இருள் தொடரவே செய்யும்.

இலங்கையில் ராஜபட்ச, தமிழருக்கு எதிராக சிங்கள இனவெறியை, பௌத்த மத வெறியைத் தூண்டியே ஆட்சியைக் கைப்பற்றினார்.

இனவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர், நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டு பதுங்கு குழியில் பயந்து ஒளிந்து பின்னர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.

ஒருவேளை இலங்கையிலும் தவறான ஒருவரைத் தேர்ந்து எடுத்ததற்காக இதுபோன்ற துன்பத்தை மக்கள் சந்தித்தாகத்தான் வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ?

                                                                                                                                               (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com